சாதிவெறியால் சமூகத்தில் நடந்த, இப்போதும் நடக்கிற கொடூரங்களை மையப்படுத்தி வருகிற திரைப்படங்களில் ஒன்றாக, கொடூர சம்பவங்களைக் காண்பித்த விதத்தில் இதுவரை தராத அச்ச உணர்வைத் தருகிற படைப்பு.
காட்டுப்பகுதிக்குள் இருக்கிற தெய்வம் நிறைசூலி. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிற இந்த கதையின் நாயகியை, அவருடைய கணவனின் குடும்பம் அந்த நிறைசூலியை தரிசிக்க, சேவல் பலியிட்டு படையலிட்டு வணங்க அழைத்துச் செல்கிறார்கள்.
சாமி கும்பிட போனால் நல்லதுதானே நடக்க வேண்டும்? மாறாக நடப்பதெல்லாம் விபரீதமாக இருக்கிறது.
கதாநாயகிக்கும் கதாநாயகனுக்குமான அறிமுகம், அவர்களுக்குள் உருவாகும் காதல், காதலோடு சுற்றித்திரியும் தருணங்கள், கோயிலுக்கு செல்கிற பயணம், படையலுக்கு முன்வரை அங்கு நடக்கும் சில விஷயங்கள் அத்தனையும் ஒவ்வொரு விதத்தில் மனதைக் கவர, அதன்பின் நடப்பதையெல்லாம் பார்க்க மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும்.
நாயகியாக தீபா பாலு, ஹோம்லி லுக் அவரது பாத்திரத்துக்கு அழகூட்டுகிறது. காட்சிகளுக்கேற்ப இயல்பாக நடித்துள்ள அவர் கிளைமாக்ஸில் உடம்பை வருத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
நாயகன் கலையரசன். அவரை எந்த படத்திலும் காதலியோடு உற்சாகம், மனைவி, பிள்ளை குட்டிகளோடு சந்தோஷம் என நல்லவிதமாக வாழவிட்டதில்லை. கொடுமைப்படுத்தி கொன்று தீர்ப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிற நடிகர் அவர். இந்த படத்திலும் சாதிவெறியர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார். காதல், கல்யாணம் என கொஞ்சம் ஜாலியாக வலம்வரும்படியான காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.
பாலசரவணனுக்கு வழக்கம்போல் கலகலப்பூட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிறைவுக் காட்சியில் அவரையும் போட்டுப் பிளக்கிறார்கள். ஐயோ பாவம் என்றிருக்கிறது.
தீபா பாலுவுக்கு அப்பாவாக வருகிற கஜராஜ், உறவினர்களாக வருகிறவர்கள் சாதிவெறியர்களாகி காட்டியிருக்கும் அரக்கத்தனம் பதற வைக்கிறது.
சாந்தன் தந்திருக்கும் இசையால் பாடல்கள் உயிரோட்டமாக கடந்துபோக, பரவச உணர்வுக்கேற்ப, பயங்கரமான சம்பவங்களுக்கேற்ப அமைந்திருக்கிறது பின்னணி இசை.
சம்பவங்கள் நிகழும் காட்டுப்பகுதியை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அழகாக காட்டியிருக்கிறது.
கடைசி கால் மணி நேரம் உயிரை உலுக்கியெடுக்கும் கொடூரங்கள் நடக்கும்போது பயத்திலும் பதட்டத்திலும் இதயத்துடிப்பு எகிற,
ஆணவக் கொலைகளுக்கு முடிவே இல்லை என்ற வேதனையோடு படம் முடிவுக்கு வருகிறபோது மனதில் பாரம் கூடுகிறது!
Rating 3 / 5

