மனைவி, மகன், மகளுடன் வாழ்ந்து வரும் ராஜனிடம் பாடும் திறமை இருக்கிறது. ரியாலிடி ஷோ ஒன்றில் அந்த திறமையை வெளிப்படுத்துகிறார். அந்த ஷோவில் கலந்துகொள்ள நேரம் ஒதுக்குவதால் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியில் சரிவர ஈடுபட முடியாமல் போகிறது. அதனால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். ரியாலிடி ஷோவில் அடுத்தகட்டத்துக்கு போக முடியாத நிலையும் உருவாகிறது.
ஒரே நேரத்தில் இரு தாக்குதல்களுக்கு ஆளான அவரது நிலைமை, அவரது குடும்பத்தின் நிலைமை என்னவாகிறது என்பது மீதிக் கதை…
கதைநாயகனாக கிஷோர். எளிமையான குடும்பத் தலைவன் கேரக்டருக்கு ஏற்ற தோற்றப் பொருத்தத்தோடு இருக்கும் அவர் உற்சாக தருணங்களை, மன உளைச்சலை சரியான சதவிகிதத்தில் வெளிப்படுத்தி காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார். பாடகராக அவரது பெர்ஃபாமென்ஸ் பாஸ்மார்க் பெறுகிற அளவிலேயே இருக்கிறது.
கிஷோரின் மனைவியாக சுபத்ரா ராபர்ட் கணவனின் கஷ்ட நஷ்டங்களில் தோள்கொடுக்கும் கடமையை பொறுப்பாக செய்திருக்கிறார்.
மகனாக, மகளாக வருகிறவர்கள் தந்தை ஆசைப்பட்டதை நிறைவேற்றத் துடிப்பது நெகிழ வைக்கிறது. மற்ற நடிகர் நடிகைகளின் நடிப்பு கச்சிதம்.
தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவு எளிமையான கதைக்களத்துக்கு ஏற்றபடி பயணிக்கிறது.
இசையை மையப்படுத்திய இந்த படத்தின் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இளையராஜாவின் பாடல்கள் வந்துபோகும் காட்சிகளில் உற்சாகம் பிறக்கிறது.
சாமானிய மனிதர்கள் சந்திக்கிற வாழ்க்கைப் போராட்டங்களின் பிரதிபலிப்பான இந்த படத்தின் கதைக்கு இயக்குநர் திரவ் அமைத்திருக்கும் திரைக்கதை கண் கலங்க வைக்கும்படியும் தன்னம்பிக்கை தரும்படியும் இருக்கிறது.
இந்த ‘மெல்லிசை’ முழுக்க முழுக்க பொழுதுபோக்குத் திரைப்படங்களை விரும்புவோரை திருப்திபடுத்தாவிட்டாலும் அழுத்தமான படைப்புகளை நேசிப்போருக்கு அதிருப்தி தராது!
Rating 2.5 

