புட்டபர்த்தி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளமுண்டு. அவற்றில் சிலவற்றை இந்த ‘அனந்தா’வில் பரிமாறியிருக்கிறார் பாட்ஷா, அண்ணாமலை, ‘பாபா’ என கமர்ஷியல் படங்கள் பலவற்றை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா.
மாபெரும் பணக்காரர் ஒருவர் டெபாஸிட் செய்வதற்காக கோடிக்கணக்கான பணத்தை எடுத்துகொண்டு வங்கிக்கு போகிறார் அங்கு வங்கியை கொள்ளையடிக்க நுழைந்த ஒரு கும்பல் ஒட்டுமொத்த வங்கியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. அவரும் அவரது பணமும் கொள்ளையர்களிடம் சிக்கிகொள்ள…
ஒரு பரதநாட்டியக் கலைஞர்; அவரது நடனத்தைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்கள். அவரும் ஆடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட…
பாபாவின் மீது மிகுந்த பற்று கொண்ட வயதான தம்பதி. அதில் மனைவி இறந்துபோகிறார். கணவர் மனம் உடைகிறார்; பாபா மீது கோபமாகிறார்…
காசியில் கங்கை நதியில் மூழ்கி, காப்பாற்றப்பட்டு உயிருக்குப் போராடும் மகன். டாக்டர்களால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதுபோல் சொல்லிவிட அந்த மகனின் தாய் துடித்துப் போகிறார்…
இப்படியாக சில மனிதர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து அவர்களை பாபா மீட்கிறார். அந்த அற்புத தருணங்களே திரைக்கதை…
கொள்ளையர்களிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, அவர்களிடம் பாபாவைப் பற்றி சொல்ல அந்த கொள்ளைக் கும்பலிடம் உருவாகும் மனமாற்றம் என நீள்கிற காட்சிகளில் ஜெகபதிபாபு,
வயதான தம்பதி விஷயத்தில் மனைவியின் மரணம் ஏன் எதற்காக என்பதை விவரிக்கும் அத்தியாயத்தில் கணவராக ஒய் ஜி மகேந்திரா _ ஸ்ரீரஞ்சனி,
கால்முறிந்த நிலையில் உடனடியாக பாபாவின் அருளாசியால் தீர்வு பிறக்கிற எபிசோடுகளில் பாபாவை நம்புபவராக அபிராமி வெங்கடாசலம், அவரது அப்பாவாக பாபா மீது நம்பிக்கையற்றவராக தலைவாசல் விஜய்,
மகனது உயிரைக் காப்பாற்ற பாபாவிடம் வேண்டி அதிசய நிகழ்வுகள் நடக்கும் தருணங்களை அனுபவிக்கும் சுகாசினி மணிரத்னம் என பாபாவின் அற்புதங்களை, அருமை பெருமைகளுக்கான சாட்சிகளாக பங்களித்துள்ளவர்களின் நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.
தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் பாடல்களில் தெய்வீகத் தன்மை கலந்திருக்க, காட்சிகளில் இருக்கும் பரபரப்புக்கு ஏற்றபடி பயணிக்கிறது பின்னணி இசை.
திரும்பிய பக்கமெல்லாம் பளீர் வண்ண பின்னணியாக இருக்க, கதாபாத்திரங்களை ஏற்றிருப்போரின் உடைகளும் பளீரென்றிருக்க, பாபா நடமாடிய இடங்களிலெல்லாம் சஞ்சய்யின் கேமரா சுற்றிச் சுழன்று காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.
கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. இந்த படத்தைப் பார்த்தால் பாபா பெரும் பணக்காரர்களுக்கான கடவுள் போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இறைவனின் அற்புதங்கள் ஸ்விட்ச் போட்டதுபோல் நடப்பதுண்டுதான் என்றாலும், இந்த படத்தில் நடக்கும் அற்புதங்கள் கொஞ்சம் செயற்கைத்தன்மையுடன் தெரிவதை இயக்குநர் தவிர்த்து இன்னும் அழுத்தமான காட்சிகளாக உருவாக்கியிருக்கலாம் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.
எல்லாவற்றையும் தாண்டி, ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களின் மனதில் அனந்தா தரும் அனுபவம் சிலிர்ப்பை ஏற்படுத்தவே செய்யும்!
Rating 4 / 5


