காமெடி அதிகம்; அதில் கொஞ்சம் கருத்தும் இருக்கும். அப்படியொரு படம்.
அந்த கிராமத்தில் ஒரு வீட்டில், முன்பே தீர்மானித்த கல்யாணம் நடக்கவுள்ளது. கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு, பக்கத்து வீட்டில் ஒரு பெரியவர் இறந்துபோகிறார். பெரியவரின் மகன் மறுநாள் காலை கல்யாணம் நடக்கும் அதே நேரத்தில் தன் அப்பாவின் இறுதி ஊர்வலத்தை நடத்த திட்டமிடுகிறார். அதே நேரத்தில் கல்யாணத்தை நடத்துவேன் என அடம்பிடிக்கிறார் கல்யாணத்துக்கு தயாராகியிருக்கிற பெண்ணின் அப்பா. இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். அதற்கு இருவரும் தயாராக இல்லை. காரணம் இருவரும் பகையாளிகள்.
ஊரில் நடக்கிற நல்லது கெட்டதுகளை தலைமை தாங்கி நடத்துகிற பஞ்சாயத்து தலைவர், ஊர் மக்கள் பலராலும் தம்பி என அன்பாக அழைக்கப்படுகிற ஜீவரத்தினம் இந்த கல்யாண வீடு, சாவு வீடு மேட்டருக்குள் வருகிறார். இரு தரப்பையும் சமாதானப்படுத்தி சண்டை சச்சரவில்லாமல் இரண்டு நிகழ்வுகளையும் நடத்த தன்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்.
பகையாளிகள் மனம் மாறினார்களா? கல்யாணம் சவ ஊர்வலம் இரண்டில் எது நடந்தது, எப்படி நடந்தது என்பது கதையின் மீதி…
பஞ்சாயத்து தலைவராக ஜீவா. பகையாளிகளை சமாதானப்படுத்தி நல்லபடியாக கல்யாணத்தையும், இறந்தவரின் இறுதி ஊர்வலத்தையும் நடத்த துடிக்கும் அவரது எண்ணமும் முயற்சிகளும் மதிக்கும்படி இருக்க, அவர் படும் பாடு ரசிக்க வைப்பதாக இருக்கிறது. காட்சிகளை அனுபவித்து நடித்திருப்பதற்காக பாராட்டுக்கள்; வெகுநாள் கழித்து தான் நடித்த படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக தலைவர் தம்பிக்கு வாழ்த்துகள்!
இறந்தவரின் மகனாக பகையுணர்ச்சியை அதிகமாக காட்டும் வாய்ப்பு தம்பி ராமையாவுக்கு தம்பி ராமையா, அதே பகையுணர்ச்சியை இதமாக பதமாக வெளிப்படுத்தும் வாய்ப்பு மணப்பெண்ணின் அப்பாவாக வருகிற இளவரசுக்கு. இருவரும் கதை தந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மணப்பெண்ணாக (பார்க்கிங் படத்தில் எம் எஸ் பாஸ்கருக்கு மகளாக வந்தவர்) பிரார்த்தனா நாதன். கல்யாணத்துக்கு தயாரான நிலையில் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற சூழ்நிலைக்கு வந்துவிட்ட மனநிலையை, படபடப்பை, பதற்றத்தை பொருத்தமான எளிமையான நடிப்பில் கடத்தியிருக்கிறார்.
ஜென்சன் திவாகருக்கு காமெடி வில்லன் கேரக்டர்களை வாரி வழங்கலாம். இப்படி பரிந்துரைக்கும்படி அசத்தலாக இந்த படத்தில் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
மாப்பிள்ளையா வருகிற சுபாஷ் கண்ணன் ஆர்வக்கோளாறில் செய்கிற விஷயங்களும் அவரது உறவினராக வருகிற சர்ஜின் குமார் கன்னியாகுமரி வட்டார வழக்கில் பேசும் விதமும் ரசிக்க வைக்கிறது.
பாடல்களை கேட்கும்படியும் பின்னணி இசையை காட்சிகளுக்கு போதுமான விகிதத்திலும் கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஜய். ஒளிப்பதிவு நேர்த்தி, எடிட்டிங் கச்சிதம்.
ஒரே நேரத்தில் ஒரு வீட்டில் கல்யாணம், பக்கத்து வீட்டில் சாவு. இரண்டு வீட்டுக்காரர்களும் பகையாளிகள். அப்படியொரு தாறுமாறான கதைக்கு சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ், அனுராஜ்.ஓ.பி அமைத்திருக்கும் திரைக்கதையில் காமெடிக்கு பஞ்சமில்லை; கருத்துக்கும் குறைவில்லை.
பொங்கல் ரேஸில் புகுந்து அதிரிபுதிரி ஹிட்டாகியிருக்கிற இந்த படத்தின் இயக்குநர் நித்திஷ் சகாதேவ் உட்பட பலரும் மலையாள தேசத்தவர்கள். படத்தின் பல அதை காட்சிகள் உணர்த்துகின்றன.
பொங்கல் விடுமுறையில் குடும்பத்தோடு போகலாம் என முடிவெடுத்தால் அதற்கு சரியான சாய்ஸ் இந்த படம்.
Rating 4 / 5


