கதாநாயகியை மையப்படுத்திய கதை. ரகசிய சினேகிதர்கள் தேன் போல் இனித்தாலும் ஒரு கட்டத்தில் தேளாக மாறுவார்கள் என பாடம் நடத்துகிற படம்.
சந்தியா திருமணமானவள்; அப்பா அம்மா பார்த்து கட்டிவைத்த, மனதுக்கு பிடிக்காத நபருடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயானவள். இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு இளைஞனுடன் தொடர்பு உருவாகி, அவனுடன் வாட்சப்பில் பேசிப் பழகிக் கொண்டிருப்பவள். அந்த இளைஞனும் திருமணமானவன். அவனுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது.
அந்த இளைஞனுடன் சந்தியா தொடர்பில் இருப்பது அவளது கணவனுக்கு தெரிந்து கோபப்படும்போது, ‘நாங்கள் நண்பர்களாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்கிறாள். ‘எனக்கு நீ அவனுடன் தொடர்பில் இருப்பது பிடிக்கவில்லை; நிறுத்திக் கொள்’ என்கிறான். அவள் மறுக்கிறாள். ஆரம்பத்தில் கண்டிக்கும் சந்தியாவின் கணவன், அவள் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதால் அடிக்கவும் செய்கிறான். அப்போதும் அவள் மனம் மாறவில்லை. அப்படியே நாட்கள் கடந்து கொண்டிருக்க, அவள் கொலை செய்யப்படுகிறாள்.
போலீஸுக்கு அவளது கணவன் மீதும், அவளுடன் வாட்சப்பில் பேசிக் கொண்டிருந்த நபர் மீதும் சந்தேகம் வருகிறது. போலீஸுக்கு மட்டுமல்ல; படம் பார்க்கும் நமக்கும் அதே சந்தேகம்தான்.
கொலை செய்தது அந்த இரண்டு பேரில் ஒருவரா? வேறு யாராவதா?
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி நகர்கிற இயக்குநர் சேகர் கன்னியப்பனின் திரைக்கதையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை…
கதாநாயகியாக, ம்ஹூம், அப்படி சொல்வது சரியாக இருக்காது. கதைநாயகி என்று சொல்வதே பொருத்தம். அப்படியான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற ஸ்வேதா ஸ்ரீம்டன் அழகாக இருக்கிறார். அவரது கண்கள் அவரை விட அழகு. அவரைப் போன்ற ஒருவர் வாட்சப்பில் அரட்டையடிக்க முன்வந்தால் முற்றும் துறந்த முனிவருக்கும் மூடு வரும். அப்படியொரு உடலமைப்பாலும் இளமையாலும் கவர்கிறவர் உற்சாகம், கோபம், இயலாமை, விரக்தி, பிடிவாதம், மனமாற்றம் என உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி நடிப்பாலும் அசர வைக்கிறார்.
அவருடன் வாட்சப்பில் கடலை போடுகிற நபராக வேல்முருகன். கிட்டத்தட்ட அவருக்கும் ஸ்வேதாவுக்குமான ஜோடிப் பொருத்தம் அசத்துகிறது. கள்ளக் காதல் போன்ற தொடர்பில் இருப்பவர் எதையெல்லாம் செய்வார்களோ சரியாகச் செய்கிறார்; எப்படியெல்லாம் வழிவார்களோ அப்படியெல்லாம் வழிகிறார்.
தன் மனைவிக்கு இன்னொரு நபருடன் இருக்கும் தொடர்பு தெரிந்து மன உளைச்சலுக்கு ஆளாவதிலிருந்து மனைவியின் மனதை மாற்ற முடியாமல் குடிக்கு அடிமையாவது வரை அப்பாவித்தனமான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் கவனம் பெறுகிறார் ஸ்வேதாவின் கணவராக வருகிற குரு பிரகாஷ்.
பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களை ஏற்று கதைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையில் டாக்டர் சுரேஷ், ஒளிப்பதிவில் ஷாம்ராஜ், எடிட்டிங்கில் டி.நாகராஜ் க.உதயமூர்த்தி கூட்டணி… ஒவ்வொருவரும் கதையின் தன்மையறிந்தும் பட்ஜெட்டுக்குள்ளும் பங்களித்திருப்பதை கதையோட்டம் பிரதிபலிக்கிறது.
கதை நாயகி தனக்கும் அந்த இளைஞனுக்கும் இருப்பது நட்புதான் என சொல்லிக் கொண்டாலும் ஒரு விதத்தில் அது கள்ளக் காதல்தான். அதை அவள் ஒரு கட்டத்தில் உணர்வதும், அதை அவளுடன் தொடர்பிருக்கும் இளைஞன் உணராததுமாக நகரும் காட்சிகள் படத்தின் அழுத்தமான பகுதிகள்.
முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களை கதாபாத்திரங்களாக்கி, சமூகவலைதள தொடர்புகள் போதையாக மாறிப்போவதை, அதனால் உருவாகும் ஆபத்துகளை எளிமையாக எடுத்துக் காட்டியிருக்கும் ரகசிய சினேகிதனே தருகிற விழிப்புணர்வு சமூகத்துக்கு அவசியமானது!
Rating 3.5 / 5


