மகேந்திரன் கதாநாயகனாக, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ள ‘த்ரிகண்டா’ படத்தை மணி தெலகுட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் மணி தெலக்குட்டி பேசியபோது, “இந்த படத்தை தமிழில் எடுக்க சென்னையில் முழுக்க ஆதரவு கொடுத்தது மகேந்திரன் தான். குமரிக்கண்டம் பகுதியில் கதை நடப்பது போல இதை ஒரு புனைவு கதையாக உருவாக்கியிருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். மெகா ஸ்டார், பவர் ஸ்டார் போல மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” என்றார்.
நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மாஸ்டர் படம் எனக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்தேன். எனக்கு அங்கே நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறார்கள். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோது தான் இயக்குனர் மணியை சந்தித்தேன்.
இந்த படம் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்ட படப்பிடிப்புக்குப் பிறகும் அதை போட்டு பார்த்துவிட்டு இன்னும் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இயக்குனரும் தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்த கஷ்டத்திற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி எதிர்பார்த்த ஒரு தெலுங்கு படமாக இந்த படம் இருக்கிறது.
மாஸ்டர் சஞ்சய் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நானே ஒரு குழந்தை நட்சத்திரம், என் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடித்திருப்பதை பார்க்க எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதேபோல சஞ்சய்க்கும் இந்த சினிமா நிறைய கொடுக்கும்.
நாட்டாமை படத்தில் கே.எஸ் ரவிக்குமார் எனக்கு மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் வைத்தார். எத்தனை காலத்திற்கு இப்படி மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயரே தொடரும் என்று நினைத்தபோது ஒரு யுனிவர்ஸ் போல லோகேஷ், விஜய் அண்ணா கூட்டணியில் மாஸ்டர் என்கிற படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என் பெயருக்கும் அது பொருத்தமாக அமைந்துவிட்டது. எனக்கு அது பெருமையான விஷயம் தான். மகேந்திரன் என்று சொன்னால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது” என்றார்.
இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது, “படத்தின் டைட்டிலைப் பார்த்தபோது ஏதோ சின்ன பட்ஜெட் படமாக இருக்கும் என்று நினைத்தால் ட்ரைலரை பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இவர்கள் செய்திருக்கும் செலவு நன்றாகவே தெரிகிறது. அதுவே இந்த படம் ஒரு கமர்சியல் படமாக வரும் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது.
டிசம்பர் மாதம் என்பதால் இந்த வருடம் தமிழ் சினிமா எப்படி இருந்தது, லாபம் எவ்வளவு நட்டம் எவ்வளவு என ஒரு விவாதம் அனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வருடம் தமிழ் சினிமா நன்றாகவே இருந்தது. நிறைய சிறு முதலீட்டு படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக மாறிய நிகழ்வு இந்த வருடம் நிறைய நடந்திருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் சிறை திரைப்படம் கூட சின்ன பட்ஜெட்டில் உருவானது என்றாலும் வெளியாவதற்கு முன்பே அதன் அனைத்து உரிமைகளும் நல்ல விலைக்கு விற்றுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்திருக்கின்றன.
ஹவுஸ் மேட்ஸ், மிடில் கிளாஸ், ஆரோமலே போன்ற சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கின்றன. இது பாராட்டத்தக்க விஷயம் தான். இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற அனுபவம் மிக்க ஆட்கள் சினிமா நன்றாக இல்லை, நடிகர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் சொல்வது போல இல்லாமல் அனைத்து நடிகர்களும் குறைந்தது நான்கு படங்களாவது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டரில் கூட்டம் வருகின்ற படம் மட்டும்தான் வெற்றி படம் என்று சொல்ல முடியாது. தயாரிப்பாளர் போட்ட முதலீடு அவருக்கு திரும்பி கிடைத்து விட்டாலே அது வெற்றி படம் தான்.
வாராவாரம் காந்தாரா போன்ற படங்கள் வெளியாக முடியுமா என்ன ? சின்ன சின்ன படங்கள் வரத்தான் செய்யும். அதற்கான வசூலை பெறத்தான் செய்யும். சினிமா நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுங்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை தெலுங்கு சினிமாவில் இது போன்ற மித்தாலஜிக்கல் படங்களை மிக அட்டகாசமாக எடுப்பார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. சுவாரசியமாக இருக்கிறது. மகேந்திரனுக்கு இது ஒரு திருப்புமுனை கொடுக்கும் படமாக இருக்கும்.
கியூப்பும் UFOவும் தாங்களே தனி ஆளுமை பண்ண கூடாது என்பதற்காக அவர்களுக்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களே தங்களது படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கொடுத்து திரையிட சொல்லலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை. இதில் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. அந்த அரசியலை சரியாக செய்து விட்டால் சின்ன பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில் மிகப்பெரிய செலவு இருக்காது என தெரிகிறது” என்றார்.
கதாநாயகி சாஹிதி அவான்ஷா, இசையமைப்பாளர் ஷாஜித், குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சஞ்சய், நடிகர் கல்லூரி வினோத், இயக்குனர் ஹாரூண் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.

