அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 
நிகழ்வில் பேசிய எஸ். கார்த்தீஸ்வரன், ”எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.
இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.
சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.
மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.
இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. “நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்” என்றார். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், ”முதலில் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நடிகர் ஆதவனுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது. எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

