கதாநாயகியை கதைநாயகியாக்கி சுற்றிச் சுழலும் கதை.
நாயகி ஜான்விகா தன் தந்தையைப் போல் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பி, அதற்காக முயற்சியிலும் தீவிர பயிற்சியிலும் ஈடுபடுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரை இரண்டு மூன்று பேர் காதலிக்க, அவர் காதலோ கல்யாணமோ எதுவானாலும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது லட்சியம் நிறைவேறிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அப்படியான சூழ்நிலையில் ஜான்விகா மருத்துவத்துறை குற்றங்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பற்றி ஆதாரத்துடன் தெரிந்து கொள்கிறார். ஆதாரத்தை காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நினைக்கிறார்.
அந்த விஷயத்தை தெரிந்துகொள்ளும் கும்பல் அவரிடமிருந்து ஆதாரத்தைக் கைப்பற்ற களமிறங்க, ஜான்வி நினைத்தபடி அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க முடிந்ததா, ராணுவத்தில் இணைய முடிந்ததா என்பதெல்லாம் கதையின் மீதி…
கதைநாயகி ஜான்விகாவின் முகத்தில் கேரக்டருக்கேற்ற முதிர்ச்சி தென்படுகிறது. கல்லூரி மாணவியாக அந்த வயதுக்கான துடிப்போடு வெளிப்படுகிறார். தன்னை ராணுவ உயரதிகாரியாக்கி பார்க்க வேண்டும் என்ற தன் தந்தையின் கனவை நனவாக்குவதை லட்சியமாக கொண்டிருப்பவர் துப்பாக்கி சுடும் பயிற்சியிலிருந்து அதற்கான முயற்சிகள் அனைத்திலும் கவனக் கூர்மையைக் காட்டுகிறார். விவசாயியாக களம் கண்டு டிராக்டர் ஓட்டுகிறார். எதைச் செய்தாலும் அதில் ஒருவித சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டிருப்பது கதாபாத்திரத்தை மேம்படுத்துகிறது. ஆக்சன் காட்சிகளில் அம்மணியின் அதிரடிக்கு பஞ்சமில்லை.
சென்றாயன் மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வருகிறார். அந்த மூவர் கூட்டணி உருவ கேலி நிரம்பிய காமெடி பங்களிப்பைத் தந்திருக்கிறது.
கிரண் பிரதாப்புக்கு கல்லூரியில் கதைநாயகி மீது காதலாகி சுற்றிக் கொண்டிருக்கிற வேலை. அந்த வேலையை கலகலப்பூட்டும்படி செய்திருக்கிறார். ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தை சுமந்திருக்கும் ஜெய் பாலாவின் அலட்டலற்ற நடிப்பு கவனம் பெறுகிறது.
பாசமுள்ள அப்பாவாக, முன்னாள் ராணுவ வீரராக, மகளை ராணுவ அதிகாரியாக்கும் முனைப்புடன் பயிற்சி தந்து ஊக்குவிப்பவராக ஆடுகளம் நரேனின் நடிப்பு கதைக்கு வலுவூட்டுகிறது.
உறுப்பு திருடுகிற மருத்துவமனை அதிபராக வருகிற சுதாகரின் நடிப்பில் வில்லத்தனம் போதுமான அளவு நிறைந்திருக்கிறது.
ராஜீஷ் இசையில் கதைக்கேற்றபடியும் சினிமாத்தனத்துடனும் ஐந்தாறு பாடல்கள் அணிவகுக்கு ரசிக்க வைக்க, பாடல்கள் படமாக்கப்பட்ட இடங்களின் அழகு மயக்குகிறது. ஹமராவின் பின்னணி இசை, சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை மெருகேறியிருக்கின்றன.
படத்தின் உருவாக்கத்திலிருக்கும் சிலபல குறைகளை ஒதுக்கிவைத்து,
பெண்களுக்குத் தைரியமூட்டுகிற விதத்திலும் தன்னம்பிக்கை தருகிற விதத்திலும் கதைக்களத்தை அமைத்து, உத்வேகம் தரும் வசனங்களை இட்டு நிரப்பி படத்தை முன்னுதாரணப் படைப்பாக்கியிருக்கிற கலா அல்லூரிக்கு பாராட்டுக்களை பரிசளிக்கலாம்.
Rating 3 /5


