காதலும் காமெடியும் கலந்த ஃபேண்டஸி ஸ்டோரியாக ‘கிஸ்.’
நெல்சனும் சாராவும் காதலிக்கிறார்கள். ஒரு நாள் சாரா நெல்சனை முத்தமிட, அன்று முதல் நெல்சன் சாராவை சந்திப்பதை தவிர்க்கிறான்; அவளை பிரியும் முடிவுக்கும் வருகிறான். அதற்கு காரணம், யார் முத்தமிடுவதை பார்த்தாலும் அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என மனதில் காட்சியாக பார்க்கும் விசேச சக்தி அவனுக்கு இருக்கிறது. அந்த சக்தி மூலம், தன்னை முத்தமிட்ட சாரா தன்னுடன் இணைந்தால் அவளுக்கு விபரீத முடிவு ஏற்படும் என்பதை காட்சியாகப் பார்க்கிறான். அதனாலேயே அவளை பிரிய முடிவெடுக்கிறான்.
இப்படி சுறுசுறுப்படையும் கதையில் அவனுக்கு அந்த சக்தி எப்படி வந்தது, அது அவனுக்கு என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குகிறது, பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதெல்லாம் நடன இயக்குநர் சதீஷ் இயக்கியிருக்கும் ‘கிஸ்’ஸிலிருக்கும் சுவாரஸ்யமான காட்சிகள்.
பிளாஷ்பேக்கில் எடுத்துச் சொல்ல வேண்டிய ராஜா காலத்துக் கதை ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது… படம் தொடங்கி தாமதமாக போகிறவர்களுக்கு சிறு குழப்பம் உருவாகலாம் என்பதாலோ என்னவோ பிளாஷ்பேக்கும் இடம்பெறுகிறது.
நெல்சனாக வருகிற கவினுக்கு விசேச சக்தி கிடைத்தபோது ஜாலியாக உணர்வது, பின்னர் அது தலைவலியாக மாறும்போது மன குழப்பத்துக்கு ஆளாவது, காதலிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவளை மன வலியுடன் பிரிய தீர்மானிப்பது என உணர்வுகளை கொட்டிக் குவிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள். அதை சரியாகப் பயன்படுத்தி மனம் கவர்கிறார்.
சாராவாக வருகிற பிரீத்தி அஸ்ராணியின் ஒல்லியான உடல்வாகு அவர் ஏற்றிருக்கும் டான்ஸர் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது; அந்த உடல் சரசரவென வளைந்து நெளிய வெளிப்படும் நடனத்தில் எக்கச்க்க எனர்ஜி ததும்புகிறது. காதலும் காதலில் பிரிவும் என கடந்துபோகும் காட்சிகளில் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்.
கவினுக்கு நண்பனாக வருகிற ஆர் ஜெ விஜய்யும் அவரது தந்தையாக வருகிற வி டி வி கணேஷும் செய்கிற காமெடி கலாட்டாக்கள் ரிலாக்ஸுக்கு கேரண்டி.
கவினின் தேவயானி, அப்பாவாக ராவ் ரமேஷ், ராவ் ரமேஷின் காதலியாக கெளசல்யா, கெஸ்ட் ரோலில் இளைய திலகம் பிரபு… ஒவ்வொருவரும் கதையின் முக்கியத்துவம் தெரிந்து பங்களிப்பு தர, ஜென் மார்ட்டின் பின்னணி இசையால் கதையின் பரபரப்பை அதிகரித்திருக்கிறார். பாடல்களின் எண்ணிக்கை அதிகம். கேட்க இதமாக இருந்தாலும் எதுவும் பெரிதாய் மனதில் பதியவில்லை.
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நேர்த்தி.
காதலையும், காதலர்களையும் வெறுத்த ராஜா காலத்துக் கதையை நிகழ்காலத்தில் கதைநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளோடு தொடர்புபடுத்தி, காமெடிக்கு பஞ்சமில்லாத திரைக்கதையில் போட்டுப் புரட்டியிருக்கும் ‘கிஸ்’ கலகலப்பான காதல் படம் பார்த்த திருப்தி தருகிறது!

