மதுப்பழக்கத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டி, மது ஒழிப்பை வலியுறுத்தும் படங்களின் வரிசையில் மற்றுமொரு வீரியமான படைப்பு…
குயிலியை அவள் வீட்டருகில் வசிக்கும் இளைஞன் விரும்புகிறான். அவன் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன் என்பதால் குயிலியும் மனதைப் பறிகொடுக்கிறாள். இருவரும் மணவாழ்க்கையில் இணைகிறார்கள். குழந்தை பிறக்கிறது. ஒழுங்காக வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்த குயிலியின் கணவன் ஒரு கட்டத்தில் மது அருந்த பழகி, அந்த பழக்கம் அவன் உயிருக்கு எமனாக முடிகிறது.
குயிலியின் மனதில் வெகு காலமாக அவரது அப்பா குடித்துக் குடித்து உயிரை விட்ட வலி இருக்கிறது. இப்போது அதே குடி கணவனை அவளிடமிருந்து பறித்துக் கொண்டிருக்கிற பரிதாபமான சூழ்நிலை.
அந்த நிலையிலும் மகனை ஐ ஏ ஏஸ் வரை படிக்க வைக்கிறாள். படிப்பை முடித்த மகன் குயிலி வசிக்கும் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார்.
ஏற்கனவே ஊருக்குள்ளிருக்கும் மது தயாரிப்பு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கும் குயிலி, மகனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற நினைக்கிறாள். அவளால் அது முடிந்ததா இல்லையா என்பது கதையின் மீதி…
இளவயது குயிலியாக வருகிற தஷ்மிகா கிராமத்துப் பெண் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்; கதாபாத்திரத்துக்கேற்ற காதல் உணர்வு, கணவனின் குடிப்பழக்கத்தை எதிர்க்கும்போது ஆவேசம் என பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நடுத்தர வயது குயிலியாக, மக்கள் சக்தியை திரட்டி ஊர் மக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்துள்ள பலமான நபரை எதிர்க்கும் போராளியாக, போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற எதையும் செய்யத் தயராக இருக்கிற பெண்மணியாக லிஸி ஆண்டனி. போராட்டக்களத்தில் காட்டும் உணர்ச்சி வேகமாகட்டும், மக்கள் கோரிக்கையை கலெக்டராக இருக்கிற மகன் கண்டுகொள்ளாதபோது வெளிப்படுத்தும் ஆதங்கமாகட்டும் திரையை ஆளுமையாக ஆக்கிரமிக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளர் வி வி அருண்குமார் கலெக்டராக வருகிறார்; மக்களுக்காக போராடும் மக்களையும் போராட்டத்துக்கு தலைமையேற்றிருக்கும் தன் அம்மாவையும் அவமானப்படுத்துகிற வேலையை இயல்பான உடல்மொழியோடு செய்திருக்கிறார்.
குயிலியின் கணவராக வருகிற ரவிச்சா சினிமா ஹீரோ போலில்லாமல், தோற்றத்தால் கிராமத்தில் வசிக்கும் மக்களோடு மக்களாக தெரிகிறார். நடிப்பும் இயல்பாக இருக்கிறது.
இந்த படத்தின் இயக்குநர் முருகபதி ஊரிலுள்ள பெண்கள் மீது காதல் பார்வை வீசியபடி மைனராக சுற்றிக்கொண்டிருப்பது சீரியஸான கதையோட்டத்தின் இடையில் லேசாக சிரித்து ரசிக்க உதவுகிறது.
மதுபான தொழிறசாலை அதிபராக வருகிறவரிலிருந்து இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருக்கிற அத்தனைப் பேரின் பங்களிப்பும் கச்சிதம்.
பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு எளிமையாக இருக்கிறது. கதையின் போக்கிற்கேற்ப எழுதப்பட்டிருக்கும் பாடல்களுக்கு ரசிக்கும்படி இசையமைத்திருக்கிறார் ஜோ ஸ்மித்.
ஊர் மக்களை குடியிலிருந்து மீட்க, மதுபான தொழிற்சாலையை இழுத்து மூட பெண் ஒருவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதன் பலன்களும் என சுற்றிச் சுழலும் இந்த படத்தின் எதிர்பாராத கிளைமாக்ஸ் அதிர்ச்சி தருகிறது.
மதுவை ஒழிப்புப் போராட்டம் பற்றி எத்தனையோ படங்களைப் பார்த்திருந்தாலும் சினிமாத்தனங்கள் அதிகம் கலக்காத இந்த குயிலி தருகிற அனுபவம் தனித்துவமானது.
உருவாக்கத்தில் குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, இந்த படைப்பின் வழியாக பிரதிபலிக்கிற இயக்குநரின் ‘நம் சமூகத்தில் மது ஒழிப்பு அவசியம்’ என்று வலியுறுத்தும் நோக்கத்தைப் பாராட்டலாம்!
Rating 3 / 5

