தனுஷின் நடிப்பை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ‘குபேரா.’
கார்ப்பரேட் தொழிலதிபர் நீரஜ் (ஜின் சர்ப்) ஒரு லட்சம் கோடி ரூபாயை, ஒரு குறிப்பிட்ட கான்ட்ராக்டை பெறுவதற்காக லஞ்சமாக மத்திய அமைச்சருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்காக பிச்சைக்காரர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பினாமியாக்குகிறார். அவர்களால் ஆக வேண்டிய வேலை முடிந்ததும் அவர்களை கொலை செய்கிறார். அந்த பினாமிகளில் ஒருவராக சிக்கிய தேவா (தனுஷ்), தன்னுடன் சிக்கிய இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்கிறார். அடுத்த பலி நாம்தான் என புரிகிறது. தப்பித்து ஓடுகிறார். நீரஜ் தரப்பு அவனைத் துரத்துகிறது…
அவர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் படும் பாடும், அவரால் நீரஜ் தரப்புக்கு ஏற்படும் பிரச்சனைகளும் என அடுத்தடுத்த காட்சிகள் வேகமெடுக்கின்றன…
தேவாவாக வருகிற தனுஷுக்கு பிச்சைக்காரனாக, பிச்சைக்காரனாக இருந்து பணக்காரத் தோற்றத்துக்கு மாற்றப்படுபவனாக, தனக்கெதிரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைபவனாக, தன் பெயரில் இருக்கிற பல்லாயிரம் கோடிக்கு தானே அதிபதியாக மாற திட்டமிடுபவனாக என காட்சிக்கு காட்சி நடிப்பில் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஏற்றியும் மாற்றியும் காட்டவேண்டிய கதாபாத்திரம். அந்த நடிப்பு அசுரன் எல்லாவற்றையும் துல்லியமாகச் செய்திருக்கிறார்.
அப்பாவி பிச்சைக்காரர்களை பினாமியாக பயன்படுத்திக் கொள்வதற்கு ரூட் போட்டுக் கொடுத்து , அது அவர்களைக் கொல்வதற்கான ரூட்டாக மாறும்போது மனம் உடைகிறவராக நாகார்ஜுனா தந்திருக்கும் நடிப்பு தரம்.
கார்ப்பரேட் வில்லனாக ஜின் சர்ப் காட்டியிருக்கும் வில்லத்தனம் மிரட்டல்; அவருக்கு அடியாட்களாக வருகிறவர்களும் அவரவர் பங்குக்கு அடாவடித்தனங்களைச் செய்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாக வருவார் என்று பார்த்தால், சினேகிதியாக வருகிறார். அந்த சினேகம் காதலாக மாறும் என்று பார்த்தால் அவர் மீது கனிவு காட்டும் நபராக மாறுகிறார். கதாபாத்திரம் வலுவாக இல்லாதது போலிருந்தாலும் நடிப்பில் குறையில்லை.
சாயாஜி சிண்டே, சுனைனா, ஹரீஷ் பேரடி, திவ்யா என மற்றவர்கள் கதைக்கு பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
போய் வா நண்பா’ பாடலின் வரிகள் சோகத்தை பிரதிபலித்தாலும் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையும் தனுஷின் ஆட்டமும் உற்சாகம் தெறிக்க விடுகிறது.
லட்சங்களில் கோடிகளில் மிதப்பவர்களின் வாழ்விடங்கள், ஒருவேளை சோற்றுக்கே வழியின்றி அல்லாடும் பரிதாப மனிதர்களின் வசிப்பிடங்கள் என கதையில் கலந்திருக்கும் இருவேறு சூழலை நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் பார்ப்பது ரிச்சான விஷுவல் டிரிட்டாக இருக்கிறது.
கார்ப்பரேட் முதலாளிகளின் சதி, அதற்கு துணைபோகும் அரசியல் அதிகார ஆளுமைகள், அவர்களிடம் சிக்கும் பிச்சைக்காரர்கள் என கதையோட்டம் முழுக்க பயத்தையும் பதற்றத்தையும் பரிமாறியிருக்கும் இயக்குநர் சேகர் கமூலா, படத்தின் முன்பாதியிலிருந்த எதார்த்தத்தையும் சுவாரஸ்யத்தையும் பின் பாதியிலும் கட்டி இழுத்திருக்கலாம்.
சிலபல லாஜிக் மீறல்கள், சலிப்பூட்டும் நாடகத்தனங்கள் இருந்தாலும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஈடுபாடான உழைப்பால் உருவாக்கத்தில் தெரிகிற பிரமாண்டம், நடிகர்களின் கச்சிதமான நடிப்பு எனபலவும் பின்னிப் பிணைந்து ‘குபேரா’வுக்கு அபார வெற்றியை அள்ளிக் கொடுத்திருக்கிறது!

