கதை நாயகன் வேலு யானை வளர்க்கிறார். அதன் மீது உயிரையே வைத்திருக்கிறார். அதை அவரிடமிருந்து ஒரு சதிகார கும்பல் திட்டமிட்டு அபகரித்துக் கொண்டு போகிறது. அந்த யானை எங்கே போனது, என்னவானது என தெரிந்துகொள்ள, மீட்டுக்கொண்டுவர புறப்படுகிற வேலு சந்திக்கும் பிரச்சனைகளும் அவர் எதையெல்லாம் தெரிந்துகொண்டார், யானையை எப்படி மீட்கிறார் என்பதும் மீதிக்கதை
வேலுவாக சண்முகபாண்டியன். யானையிடம் அன்பாக நடந்துகொள்ளும்போது தென்றலைப் போலிருப்பவர் அதற்கு ஆபத்து என்றதும் யாரெல்லம் காரணமோ அவர்களை போட்டுப் பொளக்கும்போது புயலாக மாறுகிறார். அதை தாண்டி காதல், டூயட் அது இதுவென எதிலும் ஈடுபட இந்த கதையில் வாய்ப்பில்லை. இருக்கிற திறமைக்கு நல்ல கதைகளில் நடிக்கலாமே புரோ!
காட்டுப்பகுதியை தன் வசமாக்கிக் கொண்டு, அங்கு வசிக்கும் மக்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துவது, சுயநலத்துக்காக ஆடு மாடுகளை காளிக்கு பலி கொடுத்துக் கொண்டிருப்பது, யானையை பலியிட ஆயத்தமாவது என மிரட்டியிருக்கிறார் கருடா ராம்.
சண்முகபாண்டியனின் தந்தையாக வருகிற கஸ்தூரி ராஜா யானை மீது காட்டும் அன்பு நெகிழ்ச்சி.
காட்டுப்பகுதி அடிமைகள் கூட்டத்தில் ஒருவராக வருகிற யாமினி சந்தர், ஒரு கட்டத்தில் தங்களை அடிமையாக நடத்துகிறவர்களை துணிச்சலாக சுளுக்கெடுக்கும்போது கவனம் ஈர்க்கிறார்.
யூகிசேது, முனீஷ்காந்த், ஏ வெங்கடேஷ், ரிஷி ரித்விக், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி என நிறையப் பேர் இருக்கிறார்கள்; கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகவும் செய்திருக்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் ஒரு காட்சியில் மின்னல் வெட்டு போல் தோன்றுகிறார். அதனால் குதூகல மூடுக்கு போகிற ரசிகர்கள் ஏ ஐ தொழில்நுட்பத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இசை இளையராஜா. ஒரு இடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற ‘பொட்டு வெச்ச தங்கக்குடம்’ மெல்லிய ஆறுதல். மற்றபடி சிலாகிக்க ஏதுமில்லை.
கதையோட்டம் அலுப்பு சலிப்பு தந்தாலும் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாரின் கேமரா காட்சிகளை தரம் உயர்த்தி அலுப்பு சலிப்பின் சதவிகிதத்தைக் குறைக்கிறது.
படம் பார்க்கும்போது பக்கத்து சீட் ரசிகர், ‘இது ஆரவ் நடிச்ச ராஜபீமா படம் மாதிரியே இருக்குல்ல’ என சொல்லிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
தந்தையும் மகனுமாக யானையை நேசிக்கும் இருவர் சந்திக்கும் இன்ப துன்பங்களை கதையின் மையக்கருவாக எடுத்துக்கொண்ட இயக்குநர் அன்பு, திரைக்கதையில் சுவாரஸ்யத்தை புகுத்தாததால் படைத் தலைவன் டெபாசிட் இழந்த வேட்பாளராகியிருக்கிறான்!

