குடியைக் கெடுக்கும் குடியிலிருந்து மீண்டு வர வழிகாட்டும் படைப்பாக, பாடம் நடத்தும் படமாக ‘பாட்டல் ராதா.’
ராதாமணி பாட்டல் ராதா என பலரும் பட்டப் பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு மாபெரும் குடிகாரன். அவனைத் திருத்த போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார் அவனது மனைவி. அவன் அந்த மையத்தின் கெடுபிடிகள் தாங்காமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான். அவன் தப்பித்தானா? குடியிலிருந்து மீண்டானா? என்பதற்கான பதில்களில் பரபரப்பும் சுவாரஸ்யமும் கலந்திருக்கிறது. இயக்கம் தினகரன் சிவலிங்கம்
தான் சார்ந்த வேலையில் திறமையாளனாக இருந்தும் குடியால் தன் மரியாதை குறையும்போது ஆதங்கத்தில் ஆத்திரப்படுவது, குடித்துவிட்டு மனைவியிடம் தாறுமாறாய் ரகளை செய்வது, பலரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாவது, மறுவாழ்வு மையத்தின் அடக்குமுறையில் சிக்கி அவதிப்படுவது, மறுவாழ்வு மையத்துக்கு போய் வந்தபின்னும் போதையில் மிதப்பது, ஒரு கட்டத்தில் மனம் வருந்தி திருந்தி நல்வழிக்கு மாறுவது என தனக்கான காட்சிகளுக்கு மிகமிக பொருத்தமான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் குரு சோமசுந்தரம்.
மறுவாழ்வு மையத்தின் நிர்வாகியாக ஜான் விஜய். குடி நோயாளிகளிடம் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் என்பதுபோல் கண்டிப்பையும் கனிவையும் தேவைக்கேற்ப காட்டியிருக்கிற அவரிடமிருந்து வெளிப்பட்டிருப்பது இதுவரை எந்த படத்திலும் பார்க்காத வேறோரு விதமான, தரமான நடிப்பு.
குடிகார கணவனிடம் அடி உதையோடு மனம் நொறுங்கச் செய்யும் வார்த்தைகளையும் பெற்றுக் கொண்டு அழுது புலம்பி, கத்திக் கதறி, எப்படியாவது அவனை திருத்திவிட முடியாதா என தவித்துப் போகிற மனைவியாக சஞ்சனா நடராஜன் ஏற்ற கதாபாத்திரமாகவே மாறி அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.
குடி நோயாளியாக வருகிற மாறன் வழக்கம்போல் தனது வசன உச்சரிப்பால் சிரிக்க வைக்கிறார்.
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ‘ஜமா’ பட நாயகன் பாரி இளவழகன் என மற்றவர்கள் கேரக்டரின் தன்மையுணர்ந்து நடித்திருக்க, பாட்டல் ராதாவின் பிள்ளைகளாக வருகிற குழந்தை நட்சத்திரங்களும் மனதைக் கவர்கிறார்கள்.
‘யோவ் பாட்டிலு’ பாடலில் உற்சாகம் தெறிக்கச் செய்திருக்கும் ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்தை தாங்கிநிற்கும் தூண்களில் ஒன்றாகியிருக்கிறது. ஒளிப்பதிவு கச்சிதம்.
போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் விஷயத்தில் போதை மீட்பு மறுவாழ்வு மையம் எப்படியெல்லாம் நடந்து கொள்ளும் என்பதை தெளிவாக காட்டியிருக்கும் இயக்குநர், அங்கு இப்படியெல்லாம்கூட அத்துமீறல்கள் நடக்கலாம் என்பதையும் சில ராவான காட்சிகள் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
படத்தின் உருவாக்கம் சில இடங்களில் டாகுமென்ட்ரி போலிருந்தாலும், போதைக்கு அடிமையானவர்களால் அவர்களது குடும்பமும் சமூகமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துச் சொல்லி,
அப்படி அடிமையானவர்களை மீட்டுக் கொண்டுவர வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை உருவாக்கியிருப்பதற்காக படக்குழுவை தாராளமாகப் பாராட்டலாம்.

