‘புதுமை ஏதுமிருந்தா கண்டுபிடி பார்க்கலாம்’ என சவால் விடுவது போலிருக்கிற கதையம்சத்தில் ஹாரூன் இயக்கியிருக்கிற ஹாரர் படம்.
ரோஷன் – ஸ்ம்ருதி தம்பதி சொந்த வீடு வாங்கி குடியேறுகிறார்கள். அவர்களை அங்கிருந்து துரத்த முயற்சிக்கிறது அந்த வீட்டிலிருக்கிற பேய். ‘இது என் வீடு; அதை உங்களுக்கு விட்டுத்தர முடியாது’ என அடம்பிடிக்கும் அந்த பேயின் பயமுறுத்தல்களால் நிம்மதியிழக்கிறது ஸ்ம்ருதியின் குடும்பம். இப்படி பயணிக்கிற கதையில், பேயின் வரலாறு புவியியல் உயிரியல் வேதியியல் எல்லாம் என்ன என்பதை விவரித்து, பேயிடமிருந்து ஸ்ம்ருதியின் குடும்பம் தப்பித்ததா இல்லையா என்பதை கிளைமாக்ஸாக வைத்திருக்கிறது ‘7 / ஜி’யின் ஸ்கிரீன்பிளே.
‘7 ஜி ரெயின்போ காலனி’யில் பார்த்த சோனியா அகர்வால்தான் இந்த ‘7 ஜி’யில் கதாநாயகி என்பது சுவாரஸ்யம். அந்த சோனியா சொத்துக்காக சகோதரனாலேயே கொலை செய்யப்பட்டு, பேயாகி அவனை பழி வாங்குவதை முடிந்தவரை கெத்தாக செய்திருக்கிறார்.
பேயின் அச்சுறுத்தல்களால் மிரள்வதும், பின்னர் பேயின் பழி வாங்கலுக்கு உதவுவதுமாக படம் முழுக்க நிறைந்திருக்கிறது ஸ்ம்ருதி வெங்கட்டின் கவர்கிற நடிப்பு.
ரோஷனை அடைவதற்காக செய்வினை, பூஜை புனஸ்காரம் என செய்து கவனம் ஈர்க்கிறார் சினேகா குப்தா.
லேப்டாப் பேகை மாட்டிக்கொண்டு அப்படியும் இப்படியுமாக நடமாட வேண்டிய வேலையை சரியாக செய்திருக்கிறார் ஸ்ம்ருதி வெங்கட்டின் கணவராக வருகிற ரோஷன்.
ஒருசில படங்களில் நகைச்சுவை வேடத்தில் எட்டிப் பார்த்த சித்தார்த் விபின் இதில் பணத்துக்காக தங்கையைக் கொடூரமாக கொல்லும் வில்லன். பெரிதாய் பாராட்டமுடியாத வில்லத்தனத்தோடு தங்கையைக் கொன்றுவிட்டு, பெரிதாய் எந்த அதிர்வும் தராமல் கடந்தோடும் காட்சிகளுக்கு ஓரளவு சுறுசுறுப்பான பின்னணி இசையால் உயிர் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் சுப்ரமணிய சிவா, உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு பரவாயில்லை ரகம். தமிழ் சினிமா மக்கள் தொடர்பாளர் கே எஸ் கே செல்வா போலீஸாக மெல்லிய கம்பீரத்தோடு எட்டிப் பார்க்கிறார்.
ஹாரர் படங்களின் கதைக்களமும் தரமும் எப்படி எப்படியோ மாறிவிட்ட நிலையில் கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு பின்னோக்கிப் போய், அப்போதெல்லாம் வெளியான ஹாரர் படங்களைப் போல் ஒரு படைப்பைப் பார்க்க உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த ‘7 ஜி’க்கு டிக்கெட் புக் பண்ணுங்க ஜி!
Rating 2.5 / 5

