எளிய மனிதனின் சொந்த வீட்டுக் கனவும் அதற்காக அவன் நொந்துபோகும் தருணங்களையும் கலந்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கட்டியிருக்கும் ‘3 BHK.’
வாடகை வீட்டில் குடும்பமாக வசித்துக் கொண்டிருக்கும் வாசுதேவன் (சரத்குமார்) வீடு வாங்குவதை கனவாக வைத்திருக்கிறார்; அதற்காக குறைந்தளவிலான பணத்தை சேமித்துக் கொண்டு வீடு தேடுகிறார். நினைத்தபடி வீடு அமையாமல் பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. அதையெல்லாம் அவரால் சமாளிக்க முடிந்ததா, சொந்த வீடு வாங்க முடிந்ததா என்பது கதையோட்டம்…
வருகிற வருமானம் குடும்பம் நடத்துவதற்கும், பிள்ளைகளை படிக்க வைப்பதற்குமே போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் வீடு வாங்குவதற்காக பணம் சேமிப்பது, வீடு தேடி அலைவது, கூடுதல் பணம் கிடைக்காமல் அவதிப்படுவது, வேலையில் ஏற்படும் சிரமங்களைச் சமாளிப்பது, மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் அக்கறையாக இருப்பது என தனது கதாபாத்திரத்தை இதுவரை காண்பிக்காத எளிய நடிப்பால் நிரப்பியிருக்கிறார் வாசுதேவனாக வருகிற சரத்குமார்.
அவருக்கு மகனாக சித்தார்த். கல்லூரிப் படிப்பிலிருந்து கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாகும் வரையிலான காலகட்டத்திற்கேற்ற மாறுபட்ட கெட்டப்பில் வருகிறார். படிப்பில் பின்னடைவு, பணி கிடைப்பதில் சிக்கல், கிடைத்த பணியில் நெருக்கடி என எல்லாவறையும் கடந்து அப்பாவின் ஆசை நிறைவேற வேண்டும் என்ற துடிப்போடு உழைக்கிற கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
சித்தார்த்தின் அம்மாவாக தேவயானி, காதலியாக சைத்ரா ஆச்சார், தங்கையாக மீதா ரகுநாத் என மற்றவர்கள் கதைக்கேற்ற நடிப்பை கச்சிதமாக தர, ஒன்றிரண்டு காட்சிகளில் உள்ளே நுழைந்து கலகலப்பூட்டிப் போகிறார் யோகிபாபு.
தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் இருவரின் பங்களிப்பில் கிடைத்திருக்கும் தரமான ஒளிப்பதிவு, காட்சிகளின் பரிதாப சூழலுக்கேற்ற அமைந்திருக்கும் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை, ‘கனவெல்லாம் நிஜமாக’ பாடலில் தவளும் மெல்லிசை என அனைத்தும் படத்தின் பலம்.
நகரங்களில் வசிக்கிற ஏராளமானோர் சொந்த வீட்டுக் கனவைச் சுமந்துகொண்டு, அதை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் விதவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறவர்களாக இருப்பார்கள். இந்த கதை அவர்களின் வாழ்வில் நடந்ததை, நடப்பதை எடுத்துக் காட்டுவதைப் போல் இருப்பதால் படத்துக்கான வரவேற்பு பலமாக இருக்கப்போவது உறுதியாகிறது!

