அசுர சக்தி படைத்தவர்கள் உலகத்தை அழிக்க முயற்சிப்பதும், அதை ஹீரோக்கள் எதிர்த்துப் போராடுவதுமாக பழக்கப்பட்ட உலகளவில் பிரபலமான ஃபேண்டசி கதை. அதை அனிமேஷனில் பார்க்கிற குதூகல அனுபவம் தருகிறது ‘பூனி பியர்ஸ்’ சீன திரைப்படத் தொடரின் இந்த 12-வது பாகம்.
கதையில் பிரையர், பிராம்பிள் என்ற இரண்டு கரடிகள். காடு முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு விக் என்ற ஒரு நண்பன் உண்டு. மூன்று பேரும் ‘ஈவ் சிட்டி’ என்ற மாய உலகிற்குச் செல்லும் நிலைமை உருவாகிறது.
அங்கு உலகத்தை அழிக்க தயாராகும் ஷா என்ற வில்லனின் முயற்சிகளை தகர்த்து, உலகத்தைக் காப்பாற்ற கரடிகளும் விக்கும் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்பது இந்த பாகத்தின் பரபரப்பான கதை.
ஈவ் சிட்டிக்கு மூன்று பேரும் போவதற்கு காரணமாக இருக்கிற நியான் என்ற அரக்கனுடன் கரடிகளுக்கும் விக்கிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள், ஈவ் சிட்டியிலிருக்கும் ஷாவின் கொடூர முகம், கரடிகளுக்கும் ஷாவுக்குமான மோதல்கள் என இயக்குநர் ஹூய்டா லின் அமைத்திருக்கும் திரைக்கதையில் எனர்ஜி எக்கச்சக்கம். காமெடி கலாட்டாக்களுக்கும் குறையில்லை.
சாகசம், மாய உலகம், பிரமாண்டம், தொழில்நுட்ப அம்சங்கள், உருவாக்கம் அனைத்தும் ஆச்சரியப்படுத்துகிறது. பின்னணி இசையும் படத்துக்கு நல்ல மைலேஜ் தருகிறது.
விளையாட்டுத்தனமான கதைதான் என்றாலும் அதில் நட்பு, தைரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என நம் வீட்டு குட்டி சுட்டிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களையும் போகிற போக்கில் இடம் பார்த்து சேர்த்திருக்கிறார்கள். தமிழ் டப்பிங்கில் கலகலப்பு இரு மடங்காகியிருக்கிறது.
தியேட்டருக்கு நம்பி போகலாம். மந்திர விலங்கிடமிருந்து மாயாவி சக்திகளைப் பெறும் கரடிகளின் குறும்புகளும் விக்கியின் லூட்டிகளும் குழந்தைகளை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். குழந்தைகளை கூட்டிச் செல்லும் உங்களையும் மகிழ்விக்கும்.
Rating 3.5 / 5 

