HomeCinemaஇப்படிப்பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் உதாரணமாக இருக்கிறது! -சிறை...

இப்படிப்பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் உதாரணமாக இருக்கிறது! -சிறை படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேச்சு

Published on

விக்ரம் பிரபு, புதுமுகம் எல் கே அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய சிறை’ திரைப்படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. ஓடிடி தளத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.
அதையடுத்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் நடிகர் விக்ரம் பிரபு பேசியபோது, “இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு  ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு  இரட்டை சந்தோஷமாக அமைந்தது.

இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு.

நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.

சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது  எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி” என்றார்.

நடிகர் எல் கே அக்‌ஷய் குமார் பேசியபோது “இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது  அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.

ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

இயக்குநர் சுரேஷ் சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி” என்றார்.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியபோது, ”இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.  ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.

இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர்  உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.
தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Latest articles

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...

TN 2026 சினிமா விமர்சனம்

இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து,...

More like this

‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசருக்கு கிடைத்துவரும் ரசிகர்களின் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=tzjKiAKfTqE பிக்பாஸ் ராணவ் மற்றும் ரோஸ்மின் நடித்துள்ள ‘பிரேக்பாஸ்ட் Accept the Reality’ திரைப்பட டீசரை நடிகை ரீமா சென்...

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டு படக்குழுவை...