மிர்ச்சி சிவா நடிப்பில், ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ ஃபீல் குட் உணர்வு தரும் விதத்தில் உருவாகியுள்ளது.
கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 4 அன்று வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய இயக்குநர் ராம், “முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார்.
சிவா, கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா, “ராம் சாருடன் படம் என்றதும் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று ஸ்கிரிப்ட் கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்” என்றார்.
நடிகர் சித்தார்த், ”ராம் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு. அவரது படைப்புகளில் எனது பங்களிப்பு எதாவது ஒரு வகையில் இருக்கும் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் பாடியிருக்கும் பாட்டு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். ரொம்ப ஜாலியான, அழகான படம் இது. ராம் – சிவா – கிரேஸ் மூன்று பேருடைய கூட்டணி நன்றாக வந்திருக்கிறது. ஜூலை 4 எங்களுக்கு முக்கியமான நாள். நான் நடித்திருக்கும் ‘3 BHK’ மற்றும் ‘பறந்து போ’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது மகிழ்ச்சி. குடும்பங்களுடன் நீங்கள் வந்து பார்க்கலாம்” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்திற்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு- போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு இந்தப் படம் முழுக்க இருக்கும். என்னுடைய 1000 ஆவது பாடல் இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன். நன்றி” என்றார்.

