அவளுக்கு அன்று முதலிரவு. மனதோடும் உடலோடும் கலக்கவேண்டிய தருணத்தில் கணவன் தன்னிடம் நாலு வார்த்தைகூட பேசாமல் அவசர வேலையென்று சொல்லி கிளம்பிப் போய்விட அவளது மனம் சற்றே கலங்கிப் போகிறது.
முதலிரவில் மட்டுமல்ல; அடுத்தடுத்து வந்த எந்த இரவிலும் பகலிலும் அந்த கணவன் அவளுடன் சந்தோஷமாக இருப்பதற்கு நேரம் ஒதுக்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறான். அவளது நாட்கள் பரிதாபமாகவே கழிகிறது.
ஒருகட்டத்தில், தன் கணவன் இன்னொரு பெண்ணோடு உடல்ரீதியாக கலந்து பழகுவதை அறிந்துகொள்கிறாள்.
அப்படியே ஆத்திர மனநிலையில் தான் ஓட்டிவந்த காரில் அடிபட்ட இளைஞனுக்கு சிசிச்சையளித்து கனிவாய் கவனித்துக் கொள்கிறாள். நாட்கள் நகர நகர அவனுடன் அவள் நெருங்கிப் பழகப் பழக, அவன் அவளிடம் எல்லைமீற துடிக்கிறான்.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விவகாரம் அவளது கணவனுக்குத் தெரியவருகிறது. அதன்பின், இயக்குநர் ஆதித்யா திரைக்கதையில் சேர்த்திருப்பதெல்லாம் பரபரப்பான காட்சிகள்; விறுவிறுப்பான சம்பவங்கள்…
மணப்பெண்ணுக்கான பூரிப்பு, முதலிரவுக்கான எதிர்பார்ப்பு, கணவன் தருகிற ஏமாற்றத்தால் விரக்தி, அந்த மனநிலைக்கு ஆறுதலாக ஒருவன் கிடைக்கிறபோது தொற்றிக் கொள்கிற ஈர்ப்பு, பற்றிக் கொள்கிற பரவசம், திருந்திய கணவனை ஏற்றுக் கொள்கிற பக்குவம் என அத்தனை உணர்வுகளையும் அழகாய் பரிமாறி காட்சிகளின் தேவையை கச்சிதமாய் பூர்த்தி செய்திருக்கிறார் பூர்ணா.
மனைவியை சாதாரண மனுஷியாக கூட மதிக்காமல் தன்னை கால்களால் வருடும் பெண்ணின் காமப்பசி தீர்க்க கண்ட நேரத்திலும் ஓடுகிற வில்லங்கப் பேர்வழியாக விதார்த். தான் செய்ததெல்லாம் தவறென உணர்ந்து மனைவியின் மடியில் தஞ்சமடையும் காட்சியை அவரது இயல்பான நடிப்பு மெருகேற்றியிருக்கிறது.
கை முறிந்த தன்னை கவனித்துக் கொண்ட பூர்ணா மீது இனம்புரியாத பிரியம் ஏற்பட்டு, அதன் மூலம் விபரீதத்தை சந்திக்கும் இளமையான இளைஞன் திரிகுனும் கவர்கிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனைப் போன்ற கெட்டப்பில், ஒன்றிரண்டு காட்சிகளில் வந்துபோகிற மிஷ்கின் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அந்த பணியை ‘பரவாயில்லை’ என்று சொல்லும் விதத்தில் செய்திருக்கிறார்.
சுகத்துக்கு அலைபவராய் சித்தரிக்கப்பட்டு, காஸ்ட்லியான கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறார் சுபஸ்ரீ.
கதை தறிகெட்டு ஓடினாலும், ஒளிப்பதிவில் தரம் குறைந்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கார்த்திக் முத்துகுமார்.
சில காட்சிகள் நாம் பார்ப்பது திரில்லர் படமா? ஹாரர் சப்ஜெக்டா? என்ற குழப்பத்தை உருவாக்கினாலும், அது கதையோட்டத்தின் எதிர்பார்ப்புக்கு உதவியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கதையில் சுவாரஸ்யமில்லாததால் தியேட்டரில் கூட்டம் அதிகமில்லை!