கேரளாவில் இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம் பலமாக இருப்பதற்கு அடித்தளம் அமைத்தவர்களில் முதன்மையானவர் பி கிருஷ்ணபிள்ளை. அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் விதமாக உருவாகியிருக்கும் படம் இது.
வெள்ளையர்கள் இந்தியாவை அடிமைபடுத்தி ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம். கேரளத்தின் ஒரு பகுதியை ஜமீன்தார் ஒருவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மக்களை அடிமைகளாக நடத்தி வருகிறார். அந்த பகுதியில் எந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தாலும் முதலிரவு அவருடன்தான் நடக்கிறது. அந்தளவுக்கு காமவெறி பிடித்தவராகவும் இருக்கிறார். அவரது மகனும் காமவெறியனாக வலம் வருகிறார்.
இப்படியான சூழ்நிலையில் தனது குழுவினருடன் அந்த பகுதிக்கு போய்ச் சேர்கிற கம்யூனிசப் போராளியான கிருஷ்ணபிள்ளை, மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சிகளும் அதன் பலன்களும் அடுத்தடுத்த காட்சிகளாக விரிகிறது.
அடிமைபட்டுக் கிடக்கிற மக்களிடம் உயிரைக் கொடுக்கும் துணிச்சலால் மட்டுமே அடிமைகளாக்கி அராஜகம் செய்து கொண்டிருப்பவர்களை வீழ்த்த முடியும் என்பதை எடுத்துச் சொல்லி அவர்களை துணிச்சல்மிக்க போராளிகளாக மாற்றுகிற பணியை கம்பீரத்துடன் செய்திருக்கிறார் கிருஷ்ணபிள்ளையாக வருகிற சமுத்திரகனி.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஊறிய பரம்பரையின் வாரிசு, ஊரில் பெரும் பணக்காரர், ஏழை எளிய மக்களை தனக்கு சமமாக கருதுபவர் என கனமான கேரக்டரில் பெரிய மீசையும் கம்பீர உடற்கட்டுமாக நேர்த்தியான நடிப்பைத் தந்திருப்பது பரத்.
ஜமீன்தாராக வருகிறவருக்கு மக்களை பல விதங்களில் கொடுமைப்படுத்துவதை பார்ட் டைம் ஜாப் போலவும், பெண்களுடன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதை முழு நேரத் தொழிலாகவும் செய்கிற பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்க, அதற்குரிய கொடூரமான வில்லத்தனத்துடன் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறார்.
அடிமைத்தனத்திலிருந்து எப்போது விடுபடுவோம் என்ற ஏக்கத்தில் வாழ்நாளை ரணமாக கழித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக சுரபி. அவருக்கும் ஊர் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க வந்த போராளி ஒருவர் மீது மலர்கிற காதல் அழகிய கவிதை போலிருக்க, அந்த காதலின் முடிவு பரிதாபத்தை உருவாக்குகிறது.
ஊர் மக்கள், போராளிகள், போலீஸ் அதிகாரிகள் என மற்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்திருக்க, தரமான ஒளிப்பதிவால் படத்தின் தரத்தை பலமடங்காக உயர்த்தியிருக்கிறார் கவியரசு.
எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து காட்சிகளின் தன்மைக்கு உரமிட்டிருக்கிறார்கள்.
மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறபோது அங்கு யாரேனும் ஒருவர் நுழைந்து புரட்சியை உருவாக்குவார்; பின்னாளில் அவர் உலகம் போற்றும் மனிதராக வரலாற்றில் இடம்பிடிப்பார். அப்படியானவர்களை முன்னுதாரண தலைவர்களாக கொண்டாடிக் கொண்டிருக்கிற நமக்கு அந்த வரிசையில் இடம்பெறுகிற புரட்சிப் போராளிகளில் ஒருவரான கிருஷ்ணபிள்ளை பற்றி தெரிந்துகொள்ள இந்த படம் மூலம் வாய்ப்பளித்திருக்கிற இயக்குநர் அனில் வி.நாகேந்திரன் பாராட்டுகுரியவர்.

