கெட்டவர்கள் எல்லோராலும் கொண்டாடப் படுவார்கள்; நல்லவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். அப்படியொரு உலகத்தை காட்டுவதற்கான முயற்சியில் கட்டமைக்கப்பட்ட ‘வாஸ்கோடகாமா.’
நாயகன் நகுல் நல்லவராக இருப்பதால், பலருக்கும் நல்லது செய்வதால் அவர் வசிக்க ஊரில் வீடு தர மறுக்கிறார்கள்.
அவரை கெட்டவர் என நினைத்து தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார் கெட்டவரில் சிறந்த கெட்டவர் ஒருவர். பிறகுதான் அவருக்கு நகுல் நல்லவர் என்று தெரிகிறது. ‘ஒரு நல்லவனுக்கு என் பெண்ணை கட்டித் தருவதா? நெவர்’ என அவர் ஆவேசமாகிறார்.
இப்படி தலை கீழாக புரட்டிப் போட்டது போலிருக்கும் உலகத்தில், நல்லவரான நகுலின் எதிர்காலம் என்னவாயிற்று என்பதே திரைக்கதை…
வெகுநாள் கழித்து இளமை மாறாமல் திரைக்குத் திரும்பியிருக்கிற நகுலுக்கு அயோக்கியர்களுக்கு மத்தியில் நல்லவராக சுற்றித் திரிகிற சுவாரஸ்யமான பாத்திரம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என புரியாமல் பேந்த பேந்த விழித்தே பெரும்பாலான காட்சிகளை நிரப்பிருக்கிறார்.
‘செம’ நாயகி அர்த்தனா பினு காதல் காட்சிகளுக்கு அளவாக, அழகாக பயன்பட்டிருக்கிறார்.
ஆனந்த்ராஜின் அட்டகாசங்களை கொஞ்சம் கொஞ்சம் ரசிக்க முடிகிறது. முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான் என சீனியர்கள் சிலர் சிரிப்பூட்ட முயற்சித்து திரைக்கதை, வசனத்தின் புண்ணியத்தால் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.
மதன்பாப், நமோ நாராயணா, ஆர். எஸ் .சிவாஜி, சேஷு, பயில்வான் ரங்கநாதன், படவா கோபி என பலரும் படத்தில் உண்டு.
நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றுகிற சிறைக்குள் நீளும் காட்சிகள் கொஞ்ச நேரம் கலகலப்பாக சிரிக்க வாய்ப்பு தருகிறது.
அருண் என்.வி.யின் பின்னணி இசை, என்.எஸ்.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு இரண்டிலும் குறையில்லை.
குழப்பம் தரும் திரைக்கதை பொறுமையைச் சோதித்தாலும்… கதையை வித்தியாசமாக யோசித்து, காட்சிகள் சிலவற்றில் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களைத் தூவியிருக்கும் இயக்குநர் ஆர் கே வி.யின் முயற்சியைப் பாராட்டலாம். அடுத்தடுத்த படங்களை சிறப்பாக தர வாழ்த்தலாம்.
Rating 2.5 / 5