இந்த படத்தின் டிரெய்லரில் கதாநாயகன் நட்டி, நடிகரும் த வெ க தலைவருமான விஜய் போல் தோன்றியதை வைத்து, இந்த படம் இப்படித்தான் இருக்கும் என்ற முன்முடிவுக்கு வந்தவர்களால் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்கள் பரபரப்படைந்தன. இன்று படம் வெளியான பின் அந்த பரபரப்பு கூடியிருக்கிறது.
அப்படி படத்தில் என்னதான் இருக்கிறது?
நம் தமிழகத்தின் அரசியல் களத்தில் சிலபல வருடங்கள் முன் நடந்த சம்பவங்களை, இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களத்தில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. பெரும்பாலான காட்சிகள் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கிறது. அதனாலேயே தியேட்டர்களில் கூட்டம் அள்ளுகிறது.
வட மாநிலத்திலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையோடு தமிழகம் வந்த ஒரு இளைஞனை, ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரான ஜமீன் ஒருவர் பணத்தை தாறுமாறாக செலவழித்து முன்னணி ஹீரோவாக்குகிறார். அடுத்தகட்டமாக அரசியல் கட்சி துவங்கி அவரை முதலமைச்சராக்கும் முயற்சிகளில் இறங்குகிறார். அந்த முயற்சிகள் என்ன மாதிரியான விளைவுகளை, பலன்களைத் தருகிறது என்பதே தம்பி ராமையாவின் கதை வசனத்தில், உமாபதி ராமையாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற TN 2026 தருகிற அனுபவம்…
வட மாநிலத்திலிருந்து வந்திறங்கி தனக்குத் தெரிந்த சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு பேசும் தமிழால் ஆரம்பக் காட்சிகளில் கலகலப்பூட்டும் நட்டி நட்ராஜ், முன்னணி நடிகராக உருவானபின் பந்தாவாக நடந்து கொள்கிற விதம், முதலமைச்சர் பதவி மீதான ஆசையில் காய் நகர்த்தும் விதம் என அத்தனையும் அசத்துகிறது.
ஜமீனுக்கான நடை உடை கம்பீரம், தான் வளர்த்துவிட்ட நடிகரின் அலட்டலை அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ளும் மனநிலை, தன்னால் முன்னேறிய நடிகரை தலைவனாக ஏற்றுக்கொண்டு பணிவு காட்டுவது என பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்திருக்கிற தம்பி ராமையாவை ரசிக்க முடிகிறது.
ஸ்ரீதாராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் என மூன்று கதாநாயகிகள் அணிவகுக்க, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, தலைவாசல் விஜய் என சீனியர்கள் பொருத்தமான கேரக்டர்களில் வருகிறார்கள். ரெடின் கிங்க்லிக்கு திருப்புமுனை கதாபாத்திரம்.
படம் பிரமாண்டமாக தெரிவதற்கு உதவியிருக்கிறது பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு. தர்புகா சிவா இசையில் பாடல்கள் மெல்லிய பரவச உணர்வைத் தர, பின்னணி இசை கதையின் தன்மைக்கேற்ப பயணிக்கிறது.
முன்னணி நடிகர்களாக இருந்தவர்களில், இருப்பவர்களில் ஒருசிலரின் சாயலில் கதைநாயகனை உருவாக்கியிருப்பது, இன்றைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கும் காட்சிகளால் படத்தை நிரப்பியிருப்பது தம்பி ராமையாவின் துணிச்சலைக் காட்டுகிறது.
அரசியல் நையாண்டிப் படைப்பான இந்த படம் கதையின் போக்காலும், காமெடி கலகலப்பாலும் ரசிகர்களை முழுமையான கமர்சியல் படம் பார்த்த திருப்திபடுத்துகிறது.
Rating 4 / 5

