திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கு யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் ஆப்பு வைப்பார்கள் என்பதை எடுத்துக் காட்டும் எளிய படைப்பாக ‘திரையின் மறுபக்கம்.’
சினிமா பார்ப்பதில் ஆர்வமுண்டு என்பதை தவிர சினிமா பற்றி வேறெந்த விஷயமும் தெரியாத கிராமத்து ஆசாமியொருவர், சினிமா இயக்கும் திறமையில்லாத ஒருவரை நம்பி தயாரிப்பாளராகிறார். ஆர்வக் கோளாறில் எடுத்த அந்த முடிவு அவரை எந்தளவுக்கு கஷ்டப்படுத்துகிறது, நஷ்டப்படுத்துகிறது என்பதே கதை. இயக்கம் நிதின் சாம்சன்
ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதிலுள்ள காட்சிகளை தன் படத்தில் வைப்பது, எந்திரன் ரஜினியாய் தன்னை சித்தரித்து தயாரிப்பாளருக்கு போட்டுக் காட்டுவது என உருப்படியாய் படம் எடுக்கத் தெரியாத இயக்குநராக தன் பங்கிற்கு ரகளை செய்துள்ளார் நடராஜன் மணிகண்டன்.
அப்படிப்பட்ட வெட்டி பந்தா இயக்குநர், தன்னை மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயின் ஆக்குவார் என்று நம்புகிற கதாபாத்திரத்தில் அதற்கேற்ற பொருத்தமான நடிப்பைக் கொடுத்துள்ள ஹேமா ஜெனிலியாவின் லட்சணமான முகவெட்டும் சிணுங்கலான சிரிப்பும் ஈர்க்கிறது.
சூப்பர் ஸ்டாருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டு அதற்காக சினிமா தயாரிக்க முன்வருவது, ஆர்வக்கோளாறு இயக்குநரை நம்பி நிலத்தை விற்று படம் தயாரிப்பது, நினைத்ததை விட செலவு அதிகரிக்க சக்திக்கு மீறி கடன் வாங்கி நிம்மதியிழப்பது, யாரைப் பற்றியும் விசாரிக்காமல் தன்னை அணுகுகிற எல்லோரையும் நம்புவது என தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் அப்பாவித்தனம் வெளிப்பட வேண்டிய கதாபாத்திரத்துக்கு மிகமிக பொருத்தமாக இருக்கிற முகமது கவுஸின் நடிப்புக்கு பாஸ்மார்க் போடலாம்.
சினிமாவில் தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விரிவாக காட்சிப்படுத்திய இயக்குநர் நிதின் சாம்சன், படத்துக்குள் எடுக்கப்படும் படத்தில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்; தளதளப்பான ஹீரோயினை தாராளமாக கட்டிப்பிடித்து கதகதப்பூட்டுகிறார். படத்தை இயக்கி, நடித்ததோடு சிலபல தொழில்நுட்பப் பங்களிப்பும் தந்திருக்கிறார்.
நீச்சலுடையில் கவர்ச்சி விருந்து படைக்க பயன்பட்டிருக்கிறார் ரிஷா.
மற்ற கேரக்டர்களில் வருபவர்கள் நடிப்பில் அவர்களால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.
அனில் நலன் சக்ரவர்த்தி, ரித்திக் மாதவன் இசையில் ‘ஏமாந்து போடா முட்டாளே’, ‘ஒருமுறை பார்த்தால் உயிர் போகும்’, ‘ஆசையிலும் பேராசை’ பாடல்கள் கதையோட்டத்தோடு கச்சிதமாய் கலந்திருக்கின்றன.
படத்தின் உருவாக்கம், நடிகர்கள் தேர்வு அப்படி இப்படியிருந்தாலும் திரையின் மறுபக்கத்தில் நடக்கும் ஏமாற்றுத்தனங்களை தெளிவாக காட்டியிருப்பதை, ஏமாற்றுப் பேர்வழிகளை அடையாளப்படுத்தியிருப்பதை பாரபட்சமில்லாமல் பாராட்டலாம்.
‘திரையின் மறுபக்கம்’ சினிமா தயாரிக்க முன்வரும் புதியவர்களுக்கு விழிப்புணர்வுக் கையேடு!