தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த 14.4.2024 அன்று சென்னையில் நடந்தது.
சங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்க, பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார்.
நிகழ்வில் விஷால் பேசியபோது, ”அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதுபோன்ற பண்டிகை நாட்களை குடும்பத்தோடு கொண்டாட வேண்டும். இந்த சங்கத்தில் இருக்கிற நீங்களெல்லாம் என் குடும்பத்தினர் மாதிரி. அதனால்தான் இங்கு வந்துள்ளேன்.என்னுடைய முதல் படத்திலிருந்து இன்று வரை ஆதரவு தருகிறீர்கள். இப்போது துப்பறிவாளன் 2 மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகப் போகிறேன். அதற்கும் அதே ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.
இந்த சங்கத்தின் நிகழ்ச்சிக்கு தலைவி கவிதா அவர்கள் இதுவரை மூன்று முறை என்னை அழைத்தார்கள். மூன்று முறையுமே வர முடியவில்லை. வரக்கூடாது என்பதில்லை. அப்போதெல்லாம் தவிர்க்க இயலாத கமிட்மென்டில் இருந்தேன். இறுதியாக இப்போது வந்துவிட்டேன்.
வரும் ஏப்ரல் 26 ரத்னம் பட ரிலீஸ். அதற்கான புரொமோஷன் வேலை.
அது இதுவென்று ஓடிக் கொண்டேயிருக்கும் சூழலில்தான் வந்துள்ளேன். இன்று ஹைதராபாத் போக வேண்டியிருந்தது. அதை தள்ளிவைத்து விட்டு வந்திருக்கிறேன். நான் துப்பறிவாளன் படத்தில் மட்டும்தான் ‘துப்பறிவாளன்’. ஆனால், பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எல்லோரும் தான் உண்மையான துப்பறிவாளர்கள். உங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அப்படியானவர்கள் இருக்கற இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதை செய்வேன் என்றார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஷால் பதில் அளித்தார்.