சல்மான் கான் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். அவர் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் லேட்டஸ்ட் வரவான ‘டைகர் 3’ல் மீண்டும் தனது டைகர் என்கிற உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கண்கவரும் விதமாக பிரமாண்ட அளவில் ஒரு படத்தை தரவேண்டும் என யஷ்ராஜ் பிலிம்ஸ் விரும்பியது.
அதை நிறைவேற்றும் விதமாக இருக்கை நுனியில் அமரவைக்கும் கண்கவர் ஆக்சன் படமான டைகர் 3-ல் உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் படம் பற்றி பேசிய படத்தின் இயக்குநர் மனிஷ் சர்மா, இந்த படத்தை நாங்கள் உருவாக்க துவங்கியபோது எங்கள் மனதில் இருந்த ஒரே விஷயம் ‘பிரமாண்டம்’. நாங்கள் பலதரப்பட்ட டாங்கிகள், ஹெலிகாப்டர் துப்பாக்கிகள், மிகப்பெரிய ஏவுகணைகள், லட்சக்கணக்கான தோட்டாக்கள் உள்ளிட்ட இன்னும் பலவற்றை ஒரே ஒரு ஆக்சன் காட்சியில் மட்டுமே பயன்படுத்தி உள்ளோம். டைகரின் இந்த வெடிகுண்டு தருணத்தை அனுபவித்து மகிழவேண்டும் என்பதற்காக உலகின் உயரடுக்கு படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களை ‘டைகர் 3’ல் பயன்படுத்த நாங்கள் பாடுபட்டோம். அதனால் இது வியப்பானதாகவும் மிகப்பெரியதாகவும் அற்புதமாகவும் இருப்பதோடு அனைத்துமே உண்மையாகவும் இருக்கும்.
படம் பார்க்கும் மக்கள் ஆக்சன் காட்சிகள் பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற விதமாக அவற்றை உருவாக்க விரும்பினோம். சல்மான் கான் என்கிற டைகரின் கை ஓங்குவதை நீங்கள் பார்க்கும்போது ஆக்சனுக்காக எங்களது லட்சியங்கள் எந்த அளவுக்கு அதிகமாக இருந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள் என நான் நினைக்கிறேன். வரும் ஞாயிறன்று (12.11.2023) திரையரங்குகளில் இதுபோன்ற கண்கவர் ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் தங்களை மறந்து இருக்கையில் இழுத்து பிடித்தது போல அமர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் என பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு பிறகு யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் இது 5வது படம். ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர் 12-ம் தேதி ஞாயிறன்று வெளியாகவிருக்கிறது.