மூத்த பத்திரிகையாளர் கவிதா தலைமையிலான தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவும், உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் 8.11.2023 அன்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் பி.சாமிநாதன் கலந்து கொண்டு தீபாவளி மலரை வெளியிட்டார்.
நிகழ்வில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசிய தலைவர் கவிதா, அமைச்சரிடம் ‘திரைப்பட பத்திரிகையாளர்கள் நலனுக்காக செய்தித்துறை சார்பில் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
மலரை வெளியிட்டபின் அமைச்சர் சாமிநாதன் உரையாற்றியபோது, ‘‘தமிழ்த் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்று தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் செய்தியாளர்களுக்கான நலனுக்கு தேவைப்படும் செயல் திட்டங்களையும் விரைவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற ஆவன செய்வோம்” என்றார்.
விழா மேடையில் அமைச்சர் சாமிநாதன் தீபாவளி மலருக்கு கட்டுரைகள் வழங்கிய, இன்னபிற வழிகளில் பங்களிப்பு நல்கிய உறுப்பினர்களுக்கு சங்கத்தின் சார்பிலான பரிசை வழங்கிக் கெளரவித்ததோடு, மூத்த உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
சங்கத்தின் செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்க, நிகழ்வை சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் பங்கேற்ற, திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் டைமண்ட் பாபு அமைச்சரால் கெளரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் துவக்கத்தில், ‘ராக்கிங் லேடீஸ் பேண்ட்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி மனதுக்கு இதமாக அமைந்தது.
சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.