தன்னைச் சுற்றி நடக்கும் அராஜகங்களை எதிர்ப்பதால், தீவிரவாதி என முத்திரை குத்தப்படுகிறான் கதாநாயகன். -இந்த ஒன்லைனுக்கு, வழக்கமான ஹீரோயிஸ ஃபார்முலாவில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத்
அமைச்சர் ஒருவர் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அநியாயங்களைக் கண்டால் பொங்குகிற இயல்புடைய விஜய் அவரை எதிர்க்கிறான். அமைச்சர் அவனை போட்டுத்தள்ள கூலிக்கு கொலை செய்பவர்களை ஏற்பாடு செய்கிறார். போலீஸும் ‘உன்னை ஒழிக்காமல் ஓய மாட்டேன்’ என விஜய்யின் உயிருக்கு குறி வைக்கிறது.
இப்படி பரபரப்பாகும் கதையில், அவர்களிடமிருந்து விஜய் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பது கதையின் மிச்ச சொச்சம்…
விஜய்யாக பிரஜின். ஒரு பக்கம் சமூக சேவகராக தெருவில் இறங்கி சுத்தம் செய்வது, மருத்துவ முகாமில் வாலன்டியராக வலம் வருவது என அமைதியாக நடந்து கொள்பவர், இன்னொரு பக்கம் தன்னை மடக்கிப் பிடித்து மிரட்டும் எம் எல் ஏ.வை பார்வையாலேயே நடுங்கச் செய்வது, கொலை செய்ய ஸ்கெட்ச் போடுபவர்களை தாறுமாறாய் குத்திக் கிழிப்பது, போலீஸ் அதிகாரியை ஸ்டேஷனிலேயே வைத்து சம்பவம் செய்வது, அமைச்சரின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு உயிர் பயம் காட்டுவது என அதிரடி ஹீரோவாகவும் களமாடுகிறார்.
போஸ் வெங்கட் யாருடைய செல்வாக்குக்கும் மிரட்டலுக்கும் அடிபணியாத காவல்துறை உயரதிகாரியாக கெத்தாக வந்து போகிறார். ஒவ்வொரு முறை ஹீரோ திரையில் தோன்றும்போது பில்டப் மியூஸிக் இடம்பெறுகிறது. அதேபோல் போஸ் வெங்கட்டுக்கும் பில்டப் கொடுத்து அவரது கதாபாத்திரத்தை கம்பீரமாக்கியிருக்கிறார்கள்.
இரண்டு பாடல்களில் அலட்டலில்லாமல் வந்து போவது தவிர கதாநாயகி ஷகானாவுக்கு பெரிதாய் எந்த வேலையுமில்லை.
அமைச்சராக வருகிற ஆடுகளம் நரேன் காட்டியிருக்கும் வில்லத்தனம், அவரது ஆசைநாயகியாய் வருகிறவர் கிளைமாக்ஸில் வெளிப்படும் விதம் கதையோட்டத்தின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது.
மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித், மனோ, ஜமீன்குமார், ஷர்புதீன், சந்துரு, ராஜ்குமார் என மற்ற பாத்திரங்களை ஏற்றிருப்போர் தங்களால் இயன்ற நடிப்பைத் தந்திருக்க, ஆர் டி மோகனின் பின்னணி இசை காதுகளைப் பதம் பார்க்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்.
‘மக்களுக்கு சேவை செய்வதற்கான பொறுப்புக்கு வருகிறவர்கள், அந்த பொறுப்பிலிருந்து விலகி அதிகார பலத்தை தவறாகப் பயன்படுத்தி மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களை அடக்கி ஒடுக்க, அழித்தொழிக்க மாற்றுச் சக்தி உருவாகியே தீரும்’ என, படத்தில் சொல்லியிருக்கும் கருத்தில் இருக்கிற கனம் கதையிலும், திரைக்கதையிலும் இல்லாதது பலவீனம்.
சேவகர் – ஆட்டம் அதிகம், ஆளுமை குறைவு!