பெயரளவில் இல்லாமல் நிஜமாகவே வித்தியாசமான ஃபேண்டஸி சப்ஜெக்ட்’டில் ஒரு எளிமையான படம்.
அந்த இளைஞனின் ரோல் மாடல் அப்துல்கலாம். அவரைப் போல் விஞ்ஞானியாகி புகழ் பெற வேண்டும் என்பது விருப்பம். ஆனால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டும் வேலையில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை. ஒரு நாள் அவன் ஆட்டோவில், அவன் நேசிக்கிற அப்துல்கலாம் ஏறுகிறார்.
ஆம் நிஜமாகவே அப்துல்கலாம்தான். ஆனால் விஞ்ஞானி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற அடையாளங்கள் ஏதுமில்லாத, 1948 காலகட்டத்திலிருந்து 2023-க்கு டைம் டிராவலில் வந்த சிறுவயது அப்துல்கலாம்.
அவர் ஒரு முக்கிய கடமையை நிறைவேற்ற வந்துள்ள விஷயம் தெரிந்து, அவருக்கு உதவ நினைக்கிறான். அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு பயணிக்கிறான்.
அந்த பயணத்தில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. கலாம் நிறைவேற்ற தீர்மானித்துள்ள கடமை என்ன என்பது கதையின் பிற்பகுதியில் தெரியும்போது அவர் மீதான மரியாதை கூடுகிறது…
விரும்பியதை செய்ய முடியாத விரக்தி, கலாமை சந்தித்தபின் உற்சாகம் என காட்சிகள் கேட்கிற உணர்வுகளை தன் நடிப்பில் நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார் ஆட்டோ டிரைவராக வருகிற அறிமுக நடிகர் விஸ்வத்.
இளவயது கலாமாக தோற்றத்திலும் ஹேர் ஸ்டைலிலும் பொருந்திப் போகிற நாக விஷால், காலமாற்றம் தருகிற மிரட்சியை வெளிப்படுத்துவதில் இருக்கும் அப்பாவித்தனம் கவர்கிறது. 80 வயது கடந்த ஒருவரை தன் வயதுக்கு சமமானவராக கருதி ஒருமையில் அழைத்துப் பேசுவது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
கலாமின் சிறுவயதில் அவருடன் பழகிய நண்பராக காத்தாடி ராமமூர்த்தி மிகச்சரியான தேர்வு. கதைப்படி மட்டுமல்லாது நிஜத்திலும் 80 வயதைக் கடந்தவர். ஆனாலும் நடிப்பிலிருக்கும் சுறுசுறுப்பில் அந்த முதுமை தெரியவேயில்லை என்பது ஹைலைட். கலாமோடு நட்போடு பழகிய நாட்களை நினைத்து மகிழ்வது, கலாமின் வீட்டுக்கு அவருடன் சென்று திரும்புவது, அவர் நிறைவேற்ற நினைக்கும் கடமையை உடனிருந்து முடித்துக் கொடுப்பது என கதையோட்டத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது அவரது தேர்ந்த நடிப்பு.
சுனைனா டிராபிக் போலீஸாக அவ்வப்போது வருகிறார். விஸ்வத்தின் மனதுக்கு வார்த்தைகளால் ஆறுதல் தருகிற வேலையை செய்கிறார். அவ்வளவே.
ஜெயக்குமார், ராம்ஸ் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதம்.
கதைக்குப் பொருத்தமான வரிகளில் உருவான ‘அவரும் செத்துட்டாராம்’ பாடலுக்கு கௌசிக் கிரிஷ் அமைத்திருக்கும் இசையில் புத்துணர்ச்சி இருக்கிறது. பின்னணி இசை ஓகே ரகம்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி என கதை பயணிக்கிற கடற்கரை பகுதிகள் ரெஜிமல் சூர்யா தாமஸின் கேமராவில் அழகாக பதிவாகி கண்களில் நிறைகிறது.
பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியிருக்க வேண்டிய படைப்பு. எளிய பட்ஜெட்டில் சிக்கித் திணறியிருப்பதை உணர முடிகிறது.
குறைகள் சிலவற்றைப் பொருட்படுத்தாமல், வித்தியாசமாக சிந்தித்திருக்கிற இயக்குநர் ஸ்ரீராம் அனந்தசங்கரை பாராட்டலாம்.
ராக்கெட் டிரைவர் – இலக்கு பெரிது, பாய்ச்சல் குறைவு!
Rating 3.5 / 5