ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25-வது படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் துவங்குகிறது. ’மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்’ என இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
அந்த தயாரிப்பு நிறுவனம் முன்பு தயாரித்த ‘ராக்ஷசுடு’ மற்றும் ’கிலாடியை’ இயக்கிய ரமேஷ் வர்மா இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.
பிரமாண்ட பட்ஜெட்டில், பான் இந்திய படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ராகவா லாரன்ஸின் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.