ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நவ்யா உமேஷ் பாடி, நடித்த ’இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. பாடலை, இயக்குநரும் தொழிலதிபருமான விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது ’மாவீரன்’, ’ஜெயிலர்’, ’ஜவான்’ மற்றும் ’லால் சலாம்’ படங்களின் ஆடியோ லான்ச், ’ஜீ சினி விருதுகள்’ எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகினி முரளிதரன் ஆகியோரின் மகள்தான் நவ்யா உமேஷ்.
இந்தப் பாடல் தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தும் ஒவ்வொருவரின் சுதந்திர உணர்வின் கொண்டாட்டமாகும். நம் மனதின் ஆன்மா தான் விரும்பும் எதையும் பெற்று, எங்கும் சென்றுவிடும். மேலும், அது விரும்பும் எதையும் முழு உற்சாகத்துடன் அனுபவிக்கும். சமூக விதிகள், தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் என எதுவும் அதற்கு கட்டுப்பாடு கிடையாது.
அப்படியான ஆன்மாவுக்கு என்றுமே மறைவு கிடையாது. அதுதான் ‘இறைவி’. இந்த இளம் வயதில் ஆன்மாவை ஊடுருவும் நவ்யாவின் தாக்கமான குரல் மற்றும் அவரது திரை இருப்பு இந்த பாடலுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை சேர்க்கிறது. அவர் தளபதி விஜய்யுடன் ஜோஷ் ஆலுக்காஸ் விளம்பரம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் பிக் பாஸ் ப்ரோமோ போன்றவற்றில் நடித்துள்ளார். தியேட்டர் ஆர்டிஸ்டான இவர் ‘பாரதியின் கூட்டம்’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். சூப்பர் சிங்கர், ஜீ சரிகமப புரோமோ, சின்தால் விளம்பரம் மற்றும் அரசன் சோப் விளம்பரம் போன்றவற்றிலும் வாய்ஸ் ஆக்டராக இருந்திருக்கிறார்.
’அதே கண்கள்’ மற்றும் ’தீரா காதல்’ புகழ் ரோஹின் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். ஜெகதீஷ் ரவி (ஜாக்) ஒளிப்பதிவு மற்றும் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்த இந்த அழகான பாடலை பல மொழி இசையமைப்பாளர் நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார் மற்றும் சமூக தொழில்முனைவோர் தீப்தி மிக அழகாக பாடல் வரிகளை எழுதியுள்ளார். ’என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ’கத்தி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த சென்சேஷனல் ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளனர்.