‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான பாத்திரங்களிலும் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாவுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ், பழைய ஜோக் தங்கதுரை, திவாகர், நடிகை நிரோஷா, ஆடை வடிவமைப்பாளர் சத்யா என் ஜெ உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தில் தங்களின் பங்களிப்பு குறித்து பேசினார்கள்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியபோது, ”ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியர் என்னிடம் இரண்டு கதை சொன்னார். அதில் ஒன்றுதான் லால் சலாம். இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசுகிறது. குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது. அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது. அரசியல் என்பது எல்லாவற்றிலும் உள்ளது. அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது” என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேசியபோது, ”நான் 15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் எனக்கு பரிசாக கிடைத்திருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும்போது அவருடன் கதையின் நாயகனாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கூறினார். இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்கிறது” என்றார்.
தம்பி ராமையா பேசியபோது ”தமிழ்நாட்டில் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம். ஆனால் மனித
மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளது” என்றார்.