குழந்தைகளின் உலகத்தில் நுழைந்து அவர்களின் சின்னச்சின்ன ஆசைகளை, அதற்காக அவர்கள் படுகிற சிரமங்களை, சிரமங்களைக் கடந்து அவர்கள் அடையும் உற்சாகத்தை உணர்வு மாறாமல் எடுத்துச் சொல்லும் படங்களின் வரிசையில் ‘குரங்கு பெடல்.’
சிறுவன் மாரியப்பனுக்கு சைக்கிள் ஓட்டிப் பழகும் ஆசை துளிர் விடுகிறது. அதற்காக நண்பர்களோடு சேர்ந்து வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட முயற்சிக்கிறான். அது சரிப்பட்டு வராததால் தனியாக வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட திட்டமிடுகிறான். அதற்காக பத்து காசு, இருபது காசு என சேகரிக்கிறான். ஒரு கட்டத்தில் திருடவும் செய்கிறான். அதில் அவன் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்கள் காட்சிகளாக கடந்தோட, அவனால் விரும்பியபடி சைக்கிள் ஓட்ட முடிந்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.
எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் சிறுகதைக்கு திரைவடிவம் தந்து, மண்மணம் மாறாமல் இயக்கியிருக்கிறார் ‘மதுபானக் கடை’ கமலக்கண்ணன்.
கதையின் நாயகனாக மாரியப்பனாக வருகிற சந்தோஷ் வேல்முருகனின் சைக்கிள் ஓட்டும் ஆர்வம், காசு திருடும் சாமர்த்தியம், குரங்குப் பெடலடித்து சைக்கிள் ஓட்டப் பழகும் துடிப்பு என தன்னைச் சுற்றிச் சுழலும் கதைக்கேற்ப இயலாமை, கோபம், பயம், பதற்றம் என வெளிப்படுத்தியிருக்கும் அத்தனை உணர்வுகளும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சைக்கிள் ஓட்டத் தெரியாததால் நடராஜா சர்வீஸ் என அக்கம் பக்கத்தாரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் நபராக காளி வெங்கட். மகனின் சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தால் சில சிக்கலை சந்தித்து மகன் மீது கோபப் பார்வை வீசினாலும் நிறைவில் மகனது ஆசையை நிறைவேற்றி நிம்மதியடைவது நெகிழ்ச்சி.
மாரியப்பனின் நண்பர்களாக வருகிற நான்கு சிறுவர்களின் இயல்பான நடிப்பும் கவர்கிறது. மற்ற நடிகர்களின் பங்களிப்பு நிறைவு.
இயக்குநர் பிரம்மா, போ மணிவண்னன் இருவரின் கதைச் சூழலோடு ஒட்டியுறவாடுகிற பாடல் வரிகளுக்கு ஜிப்ரான் அமைத்திருக்கும் இசை இதயம் வருடுகிறது.
80, 90 காலகட்டத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குநர். கதைக்களத்தை உயிரோட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
சிறுவயது அனுபவங்களை மலரும் நினைவுகளாக்கி அசைபோட வைத்த விதத்தில் குரங்கு பெடல் தமிழ்த் திரையுலகின் தனித்துவமான படைப்பாக, சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற பெருமையை தக்க வைக்கிறது. ந்ல்ல படத்தை வெளியிட்ட பெருமை நடிகர் சிவகார்த்திகேயனை சேர்கிறது.
குரங்கு பெடல் – குழந்தைகளுக்கு குதூகலம்; பெற்றோருக்கு வாழ்க்கைப் பாடம்!