திரைத்துறையில் இயக்குநராக களமிறங்க முயற்சி செய்யும் இளைஞன் ஒருவன், கல்யாணத்துக்கு முன்னும் கல்யாணத்துக்கு பின்னும் சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களின் தொகுப்பாக விரிகிறது ‘க.மு க.பி’யின் கதைக்களம்.
அன்பு திரைப்படம் இயக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அனு என்ற பெண்ணைக் காதலிக்கவும் செய்கிறான். அவனிடம் இருக்கும் கதையைச் சொல்லி தயாரிப்பாளர்களைக் கவர்வது பெரும் போராட்டமாக இருக்கிறது. படம் இயக்கும் வாய்ப்பு கிடைப்பதற்குள் காதலித்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அமைகிறது.
காதலனாக இருந்தவரை வருமானமில்லாமல் நாட்களைக் கடத்திய அவன், அதேபோலவே கல்யாணத்துக்குப் பின்னும் நடந்து கொள்ளும் சூழ்நிலையில் சிக்குகிறான்.
தயாரிப்பாளர்களைப் பார்த்து கதை சொல்வது, ஸ்கிரிப்ட் எழுதுவது என வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்தாலும் வருமானம் இல்லாததால், எல்லாவற்றுக்கும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் மனைவியை எதிர்பார்க்கும் நிலைமை. அப்படியான சூழ்நிலையில், மனைவியின் நடவடிக்கைகளில் சம்பாதிக்கும் திமிர் இருப்பதாக உணர்கிறான்.
அப்புறமென்ன… கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் உருவாகி, விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் நுழைகிறார்கள்.
இப்படி நகரும் கதையில் அன்புவின் இயக்குநராகும் முயற்சி என்னவானது, மணவாழ்க்கையிலிருந்து பிரியும் முடிவின் அடுத்த கட்டம் என்ன என்பதையெல்லாம் காண்பித்து கடந்துபோகிறது திரைக்கதை…
அன்புவாக வருகிற விக்னேஷ் ராஜா, இயக்குநராகும் முயற்சியிலிருப்பவர்கள் சந்திக்கிற ஏமாற்றம், தோல்வி, துரோகம் என எல்லாவற்றையும் சந்திக்கிறார். அந்த மன வலிகளை தன் இயல்பான நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். காதல் காட்சிகளில் கூடுதல் வழிசலாய் நடந்துகொண்டிருக்கிறார்.
விளிம்பு நிலை மக்களில் ஒருவராக, கஷ்ட நஷ்டத்தின் உச்சத்தை அனுபவிப்பவராக, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறவராக என பரிதாப கதாபாத்திரங்களிலேயே பார்த்துப் பழகிய சரண்யா ரவிச்சந்திரனை புன்னகை பொங்கும் முகத்துடன், ரொமான்ஸில் வெட்கம் சிந்துபவராக பார்ப்பதே புத்துணர்ச்சியாக இருக்கிறது. இதுவரை பார்த்ததைவிட அழகாக தெரிகிற அவர் காதல், காமம், ஏக்கம், கோபம், விரக்தி என உணர்வுகளின் கலவையாய் தந்திருக்கும் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
கதைக்குள் நிகழும் கதையில் கதாநாயகனாக ‘லப்பர் பந்து’ டி எஸ் கே, அவரது காதலியாக பிரியதர்ஷினி… ஜோடிப் பொருத்தமும் இருவரின் நடிப்பும் அசத்துகிறது.
மனைவியை அடிமையாக நடத்துகிற நிரஞ்சன், அவருக்கு மனைவியாக அபிராமி முருகேசன்… எப்படி நடந்துகொண்டால் மணவாழ்க்கை இனிக்கும் என்பதற்கான பாடமாக இருக்கிறது அவர்களின் பங்களிப்பு.
மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
ஜெகன் கவிராஜ் ‘இறைவியே’ பாடலில் சோகச் சூழ்நிலைக்கு உகந்த வரிகளை வழங்கியிருக்க, அதற்கு உயிரோட்டமான இசையைத் தந்திருக்கிறார் சமந்த் நாக்.
பின்னணி இசையை அமைதி ததும்ப கதையோட்டத்தின் தன்மைக்கேற்ப தந்திருக்கிறார் தர்சன் ரவிகுமார்.
ஜி எம் சுந்தரின் ஒளிப்பதிவு பட்ஜெட்டில் அடங்கி பயணித்திருக்கிறது.
எந்த துறையாக இருந்தாலும் திறமையாளர்களுக்கான மரியாதை குறைவாகத்தான் இருக்கும். அதுவும் பின்னணி ஏதுமின்றி திறமையை மட்டும் முதலீடாக வைத்துக்கொண்டு திரைத்துறைக்குள் நுழைய முயற்சிப்பவர்கள் படுகிற கஷ்ட நஷ்டங்கள் எக்கச்சக்கம். அவற்றை விதவிதமாக எடுத்துக் காட்டிய பல படங்களை பார்த்திருக்கிறோம். இந்த படத்தின் கதைக்கருவும் அப்படிப்பட்டதுதான் என்றாலும் கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என்ற கோணத்தில் திரைக்கதையை உருவாக்கி வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.