சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி, வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படம் ‘கங்குவா.’ பான் இந்திய படைப்பான இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் சூர்யா பேசியபோது, “அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி. ரசிகர்களுடைய 27 வருட அன்பிற்கும் வாய்ப்பு கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார். எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.
சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.
இந்த படம் பெரிய தலைவாழை விருந்து. மேலும் மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம். நல்லதே நடக்கும், என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன். மன்னிப்பு ஒரு அழகான விஷயம் என்பதை எனக்கு சிவா கற்றுக்கொடுத்தார். அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறி உயர்வோம்.
சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மாதிரி பார்க்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் ‘பாஸ்’ என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை எப்பவுமே எளிதாக அணுகலாம். என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார். விஜய் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்” என்றார்.
விழாவில் பேசிய இயக்குநர் சிவா, “’கங்குவா’ படத்தை இரண்டு வருடங்கள் எடுத்தோம். அந்த காலத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புத வாய்ப்பை இறைவன் கொடுத்ததற்கு நன்றி. நூறு சதவீதம் கொடுத்திடலாம் என்று 100 தடவை சூர்யா என்னிடம் சொன்னார்.
நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால் அதை சலிக்காமல் செய்தார். கங்குவா கதாபாத்திரம் நடிப்பதற்கு மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலம் தேவை. அதை மிகச்சிறப்பாக செய்தார் சூர்யா. சிறுத்தை சிவா என்ற அடையாளத்தை ஞானவேல் ராஜா எனக்கு கொடுத்தார்.
அடுத்த 15 வருடங்களுக்கு ’கங்குவா’ எனது கரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய அப்பா இப்போது உயிரோடு இல்லை. அவர் இருந்திருந்தால் நிறைய சந்தோஷப்பட்டிருப்பார். எனது மனைவி இதுபோன்ற விழாக்களுக்கு வரமாட்டார். சண்டை போட்டு அவரை வரவைத்தேன். ’கங்குவா’ படத்திற்கு ஒப்பந்தமான பிறகு, கண்டிப்பாக இரண்டு வருடங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கஷ்டப்படுவேன் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என்னையும், எனது குடும்பத்தையும் மனைவிதான் சந்தோஷமாக பார்த்துக்கொண்டார். அவருக்கு நன்றி.
இந்தப் படம் அருமையாக இருக்கிறதாக இதுவரை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கமர்ஷியலாக படம் பண்ணிக்கொண்டிருந்தவன் நான். அது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில் மக்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் செய்வது சாதாரண விஷயமில்லை. இந்த மாதிரியான ஒரு படம் பண்ணலாம் என்று ஆசைப்பட்டபோது அந்த ஆசைக்கு அடித்தளம் என்னுடைய நண்பர், வழிகாட்டி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாக நினைக்கக்கூடிய அஜித் சாரிடம் இருந்துதான். இத்தனை பேரின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் அவரின் நம்பிக்கையை என்னிடம் வைத்தார். சிவா நீ இருக்கக்கூடிய உயரம் இது இல்லை. உனக்கு சினிமாவில் எல்லாமே தெரியுது. நீ சிறகடித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு என்று சொன்னார். கங்குவா திரைப்படம் அழகான முயற்சி, கடுமையான உழைப்பு. இதற்கு இறைவன் கண்டிப்பாக பலன் கொடுப்பார்” என்றார்.