அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவுக்கு மீண்டுமொரு படைப்பு. எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வோடு அணுகும் சீனு ராமசாமியிடமிருந்து ‘கோழிப்பண்ணை செல்லதுரை.’
சிறுவயதிலேயே அப்பா அம்மாவை பிரிந்த செல்லதுரையும் அவனது தங்கையும் பெரியப்பாவின் அரவணைப்பில் வளர்கிறார்கள். வளர்ந்தபின் காதலில் விழுந்த தங்கையை கண்டிக்கிறான் செல்லதுரை. அதனால் அவர்களின் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் உருவாகிறது. அதை அவர்கள் எப்படி சமாளித்து மீள்கிறார்கள் என்பதே கதையின் மிச்சமீதி.
செல்லதுரையாக ஏகன். அவரது எளிமையான தோற்றத்துக்கு ஏற்ற கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்திவிட தங்கையிடமும் பாசம், பெரியப்பாவிடம் விசுவாசம் என தன் நடிப்பை பாராட்டும்படி பங்கிட்டு பரிமாறியிருக்கிறார். கோபம், தியாகம் என இன்னபிற உணர்வுகளையும் உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார்.
தங்கையாக வருகிற சத்யாவுக்கு களையான முகம். அவருக்கான காட்சிகள் அந்த முகத்தை பரிதாபமாக வைத்துக் கொள்ளும்படியே அமைந்துவிட, சில தருணங்களில் கண்களால் கவர்கிறார்.
பெரியப்பாவான தன்னிடம் அடைக்கலமாகிவிட்ட செல்லதுரைக்கு தன் கறிக்கடையில் வேலை போட்டுக் கொடுத்து, அவனது தங்கையையும் கவனித்துக் கொள்கிற யோகிபாபு தன் நடிப்பில் காட்டியிருக்கும் கனிவு, கருணையும் கதையோட்டத்தை உயிர்ப்புடன் நகர்த்திப் போகிறது.
தான் காதலிப்பது தெரிந்தும் அதை கண்டுகொள்ளாத செல்லதுரையை கவர்வதற்காக என்னென்னவோ செய்கிறார் அழகான கண்களுக்கும் வசீகர புன்னகைக்கும் சொந்தக்காரரான பிரிகிடா. எதிலும் புதுமையில்லை.
செல்லதுரை சிறுபிள்ளையாக இருந்தபோது ஐஸ்வர்யா தத்தா அம்மாவாக களமாடியதில் தவறில்லை. அதே செல்லதுரை வாலிப பருவத்தை எட்டியபின்னரும் அவரே அம்மாவாக வலம் வருவது பொருத்தமாக படவில்லை.
உருவம் குள்ளமாக இருந்தாலும் நல்ல உள்ளத்தோடு செல்லதுரையின் நல்லது கெட்டதில் ஒட்டிக்கொண்டிருக்கிற குட்டிப்புலி தினேஷின் பங்களிப்பு கவனம் ஈர்க்கிறது. சத்யாவின் காதலனாக வருகிற லியோ சிவகுமார் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பில் குறையில்லை.
கதை நிகழும் அழகான தேனி அசோக் ராஜின் ஒளிப்பதிவில் பொலிவுகூடி கண்களுக்கு குளிர்ச்சி தர,
காட்சிகளில் இருக்கிற உணர்வுகளின் வெளிப்பாட்டை என் ஆர் ரகுந்தனின் பின்னணி இசை மெருகேற்றியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை.
எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளில் சிலவற்றை உணர்வுபூர்வமாக தொட்டுக்காட்டியிருக்கும் சீனு ராமசாமி, காட்சிகளை சீரியலின் தரத்தில் சித்தரித்திருப்பது படத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.