‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற மற்றொரு யதார்த்தமான படத்தை தயாரித்துள்ளது. படம் ரசிகர்களை கவர தயாராக உள்ளது.
பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘ஜமா’ என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்தின் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தின் தயாரிப்பிற்காக பெயர் பெற்ற Learn and Teach Productions-ன் சாய் தேவானந்த் ‘ஜமா’ படத்தைத் தயாரித்துள்ளார்.
முழுப் படமும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, நிஜ வாழ்க்கை தெரு நாடகக் கலைஞர்கள் படப்பிடிப்பு தொடங்கும் முன் ஒத்திகைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. ‘அவதாரம்’ படத்திற்குப் பிறகு இந்த வகையான இசையை அவர் மீண்டும் தேர்வு செய்துள்ளார்.
படக்குழு:-
கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார். தொழில்நுட்பக் குழுவில் உள்ள மற்றவர்கள் ஏ.எம். செந்தமிழன் (ஒலி வடிவமைப்பு), அபிநந்தினி (ஆடை வடிவமைப்பு), தண்டோரா சந்துரு (பப்ளிசிட்டி டிசைனிங்), சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ. நாசர் (மக்கள் தொடர்பு), நானல் நரேஷ் (தயாரிப்பு நிர்வாகி), சீனிவாசன் (தயாரிப்பு மேலாளர்), பிரகாஷ் (நிர்வாகத் தயாரிப்பாளர்) மற்றும் பலர்.