நடிகர் கார்த்தி யூடியூபர் முகமது இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’வை சமீபத்தில் திறந்து வைத்தார்.
அப்போது, அவர் ‘இர்ஃபானின் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று குறிப்பிட்டு இர்ஃபானின் வியக்கத்தக்க சாதனைக்காக வாழ்த்தினார். இர்ஃபான் மற்றும் அவரது குழுவினரின் கடின உழைப்பு மற்றும் விருப்பமான தொழிலைத் தொடரும் அவர்களின் நேர்மையான முயற்சிகளைப் பாராட்டினார். மதன் கௌரி, பரிதாபங்கள் கோபி & சுதாகர், கிஷன் தாஸ் மற்றும் பல யூடியூப் பிரபலங்கள் துவக்க விழாவில் கலந்துகொண்டு இர்ஃபானை வாழ்த்தினர்.
தமிழ் யூடியூப் உலகின் சின்னமாக சென்னை நுங்கம்பாக்கத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ படப்பிடிப்பு, படத்தொகுப்பு, சிஜி மற்றும் அனிமேஷன் வேலைகளுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. சமூக ஊடக மேலாண்மை, திரைப்படம் மற்றும் பிராண்ட் விளம்பரங்கள் உட்பட பல புதிய செயல்பாடுகளில் களமிறங்கிப் பணியாற்றவுள்ளது. சித்தார்த் சந்திரசேகர் வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த ஸ்டுடியோ அனைவரையும் ஈர்க்கும் வகையில் அழகுடன் அமைந்துள்ளது.
புதிய ஸ்டுடியோ பற்றி இர்ஃபான் பேசும்போது, “எனது ஸ்டுடியோவை கார்த்தி சார் போன்ற ஒரு அற்புதமான ஆளுமை திறந்து வைத்தது என் வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான தருணம்.
நட்சத்திரக் குடும்பத்தில் பிறந்தால் முதலிடத்தைப் பெற முடியாது; கடின உழைப்பு, நேர்மை, ஆர்வம், விட்டுக்கொடுக்காத மனப்பான்மை வேண்டும் என்பதை நிரூபித்த அவர், இளைஞர்கள் அனைவருக்கும் பெரும் உத்வேகமாக இருந்து வருகிறார். அர்ப்பணிப்பு உங்களுக்கு எப்போதும் வெற்றியைத் தரும். இந்த துவக்க விழாவில் அவர் கலந்துகொண்டது எனக்கு பாஸிட்டிவ் எனர்ஜியை தந்துள்ளது.
விழாவை சிறப்பித்த தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சமீர் பரத் ராம் ஆகியோருக்கு நன்றி. யூடியூப், ஆன்லைன் மற்றும் சமூக ஊடக உலகில் உள்ள எனது நெருங்கிய நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டது இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பாக அமைந்தது.
எனது வாழ்க்கையை மேம்படுத்துவதில் தூணாக இருப்பவர்கள் மக்கள் தான், அவர்களை மகிழ்விக்கும் வகையில் எனது ஸ்டுடியோவிலிருந்து சிறந்த படைப்புகளை வழங்குவதற்கான அதிக பொறுப்புகளுடன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கவுள்ளேன்” என்றார்.
இர்ஃபான் தற்போது ஓரிரு திரைப்படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார்.
இர்ஃபான் 2016-ல் தனது யூடியூப் சேனலை தொடங்கினார். ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோவை பதிவேற்றியதன் மூலம் இதுவரை 2100 வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இவரது உணவுத்தேடல் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மக்கள் மத்தியில் இவரை மிகப்பெரும் ஸ்டாராக்கியுள்ளது. இடைவிடாத கடின உழைப்பு மற்றும் சிறந்த உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள் மூலம் யூ டியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் 6 மில்லியன் ஃபாலோயர்ஸின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார்!