‘ஆடுகளம்’ நரேன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட கும்பல் சிலரை குறிவைத்து உயிரைப் பறிக்கிறது. செய்வது குற்றச் செயல்தான் என்றாலும் அது தப்பில்ல என்கிறார்கள். அப்படியானால் அவர்கள் கட்டம் கட்டுவது யாரை என்பதும், காரணமென்ன என்பதுமே கதை.
உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆட்களை வைத்து சிலரது உயிரைப் பறித்தாலும் அதிலும் முடிந்தவரை கெத்து காட்டியிருக்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரியாக வருகிற ‘ஆடுகளம்’ நரேன் .
தாங்கள் குறிவைத்தவர்கள் சிக்கியதும் அவர்களை தாக்கும்போது காட்டும் ஆத்திரத்தில் தனித்து தெரிகிறார் பாண்டி கமல்.
மூன்று இளைஞர்களை தன் காதல் வலைக்குள் விழவைக்கிற சம்பவத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார் அழகான, இளமையான மேக்னா! அவரிடம் வழிகிற இளைஞர்களின் நடிப்பும் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
முத்துக்காளை, வெங்கல் ராவ் என படத்தின் மற்ற நடிகர்கள் கதையின் தன்மையுணர்ந்து நடித்திருக்க தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
திரைக்கதையின் தேவையுணர்ந்து பின்னணி இசையமைத்திருக்கிறார் பரிமளவாசன்.
‘வாழத் தகுதியில்லாதவர்களை எந்த விதத்திலாவது உலகத்திலிருந்து அகற்றிவிட வேண்டும்’ என்பதை வலியுறுத்தியிருப்பதற்காக இயக்குநர் தேவகுமாரை பாராட்டலாம். இப்படியான பாராட்டுக்கள் தரும் ஊக்கத்தோடு அடுத்தடுத்த படங்களை சிறப்பாக இயக்க வாழ்த்துகளும் தெரிவிக்கலாம்.