வாய்விட்டு சிரிக்க, மனம் விட்டு ரசிக்க சந்தானம் நடிப்பில் மற்றுமொரு படம்.
ஜமீன் குடும்பம் என நினைத்து திவாலான குடும்பத்துப் பெண்னை கல்யாணம் செய்து கொண்டு, மாமனாரையும் மச்சானையும் வீட்டில் சேர்த்துகொண்டு மன உளைச்சலோடு நாட்களைக் கடத்துகிறார் சந்தானம். அந்த மாமனாரும் மச்சானும் சேர்ந்து சநதானத்துக்கு உதவி செய்வதாக கருதி ஒரு காரியத்தை செய்யப்போய், அது கொலையில் முடிகிறது. அந்த கொலையையும் கொலை செய்யப்பட்ட உடலையும் சட்டத்திடமிருந்து மறைக்க மாமனார், மச்சான், மனைவியோடு சேர்ந்து சில தில்லுமுல்லுகளை செய்கிறார் சந்தானம். அந்த தில்லுமுல்லு சமாச்சாரங்கள் அத்தனையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கொலையானது யார்? கொலைக்கான காரணம் என்ன? சந்தானமும் அவர் குடும்பமும் கொலைப் பழியிலிருந்து தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பது கதையின் நிறைவு.
கொலை அது இதுவென கதையைப் பார்த்தால் சீரியஸாக தெரியும். ஆனால், திரைக்கதையின் நகர்வில் காட்சிக்கு காட்சி சிரிப்பு மசாலா தூவியதில் நிமிடத்துக்கு நிமிடம் தியேட்டரில் சிரிப்பலை. இயக்கம் ஆனந்த் நாராயணன்
ஜமீன் குடும்பத்துப் பெண்ணை கல்யாணம் செய்து சொள்வதன் மூலம், தனது 25 லட்சம் கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணத்தில் கல்யாணம் செய்து கொண்டபின் அந்த குடும்பத்துக்கு ஊர் முழுக்க கடன் என தெரிந்து அதிர்வது, மாமனார், மச்சானின் விளையாட்டுத் தனங்களால் பாதிக்கப்படுவது என padaம் முழுக்க்சந்தானத்தின் நடிப்புப் பங்களிப்பில் காமெடி டெலிவரி எக்கச்சக்கம்.
சந்தானத்தின் மனைவியாக வருகிற பிரியலயா ஹோம்லி லுக்கில் அழகாக இருக்கிறார்; சீரியஸாக கொஞ்சமும், சிரிப்பூட்டும்படி கொஞ்சமும் நடித்திருக்கிறார்.
சந்தானமும் பிரியலயாவும் கலர்ஃபுல்லாக ஆடிப் பாட மூன்று ரகளையான பாடல்களும் உண்டு.
ஜமீனாக கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதிபோல் ஆரம்பக் காட்சியில் கெத்து காட்டி, சந்தானத்துக்கு மகளைக் கல்யாணம் செய்து வைத்தபின் பிச்சைக்காரனை விட மோசமான நிலைக்கு ஆளாகிற படு சுவாரஸ்யமான பாத்திரத்தில் தம்பி ராமையாவின் ஒவ்வொரு செய்கையும் கலகலப்புக்கு கேரண்டி. அவருக்கு மகனாக வருகிற பால சரவணன் லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.
சந்தானத்தின் நண்பன், தீவிரவாதி என இரண்டு வேடங்களில் வருகிற விவேக் பிரசன்னா, சடலமாகி நடிப்பது, சடலமாக நடிப்பது என தன் பங்குக்கு அதிரிபுதிரி ஆட்டம் போட்டிருக்கிறார்.
முனீஷ்காந்த், மாறன், சேஷு என சந்தானத்துடன் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகிறவர்களின் அலப்பரையும் இருக்கிறது.
‘குலுக்கு குலுக்கு, மாயோனே’, ‘மாலு மாலு’ என அணிவகுக்கும் பாடல்களுக்கு இமான் தந்திருக்கும் இசையில் உற்சாகம் தெறிக்கிறது.
ஒளிப்பதிவு நேர்த்தி.
லாஜிக் பார்த்தால் அது எப்படி முடியும்?, இது எப்படி சாத்தியம்? என ஏகப்பட்ட கேள்விகள் எழலாம். ஆகவே, லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் பார்த்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்; வயிறு வலிக்க சிரிக்கலாம்.