‘சமூகமென்பது மனித மிருகங்கள் சூழ்ந்திருக்கும் இடம்‘ என்பதை எடுத்துச் சொல்லும் படம்.
கல்லூரிப் படிப்பைத் தொடர்கிற அந்த பெண்ணை, அமைச்சரின் மகன் காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் அவன் தனிமையான சந்தர்ப்பத்தை உருவாக்கி அவளை அனுபவிப்பதோடு, காமவெறி பிடித்த தனது மூன்று நண்பர்களுக்கும் விருந்தாக்குகிறான். அத்தோடு விட்டுவிடாமல் அந்த பெண்ணை அமைச்சரின் மகன் கொலை செய்ய, சடலத்தை நான்கு பேருமாக சேர்ந்து எரித்தும் விடுகிறார்கள்.
அந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை சட்டம் தண்டிக்கும் என எதிர்பார்க்கிறார் அந்த பெண்ணின் அப்பா. குற்றவாளி அமைச்சரின் மகன் என்பதால் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகிறது. அதையடுத்து அவர் என்ன செய்கிறார் என்பதே கதையின் போக்கு…
முதன்மைப் பாத்திரத்தில் வருகிற ஃபைன்ஜான் (இந்த படத்தின் தயாரிப்பாளர்) ஆரம்பக் காட்சிகளில் பாசக்கார அப்பாவாக இயல்பான நடிப்பால் கவர்பவர், அடுத்தடுத்து மகளை இழந்த வேதனையில் துடிப்பவராக, மகளை சீரழித்துக் கொன்றவர்களை பழிவாங்கும் வெறியேறியவராக பொருத்தமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் தோற்றம் முழுமையாக மாறிப்போய் வேறொரு அவதாரமெடுத்திருக்கிறார். அதற்கான பாராட்டுகளும் அங்கீகாரங்களும் காத்திருக்கிறது!
அப்பாவுடனான பாசப்பிணைப்புக் காட்சிகளில் உயிரோட்டமான நடிப்பைத் தந்திருக்கும் ஸ்ரீதேவி உன்னிகிருஷ்ணன், தன்னைக் காதலிப்பவனின் சுயரூபம் தெரியாமல் அவனை நம்பிப் போய் சிக்கிச் சின்னாபின்னமாகும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.
பெண்களைக் காதலிப்பதாக நம்ப வைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது, நிர்வாணமாக வீடியோ எடுத்து ரசிப்பது என நீளும் காட்சிகளில், அந்த நான்கு இளைஞர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக, காமவெறியர்களாக வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு கச்சிதம்.
வழக்கத்திற்கு மாறாக நேர்மையான போலீஸாக வந்து போகிறார் சேரன் ராஜ். அமைச்சர், வழக்கறிஞர் என மற்ற கேரக்டர்களில் வருபவர்களும் கதைக்கு உரிய பங்களிப்பை வழங்கியிருக்க, பரபரப்பான காட்சிகளுக்கு பின்னணி இசையால் சுறுசுறுப்பூட்டியிருக்கிறார் வித்யாஷரண்.
‘ஆரிரோ ஆராரிரோ’ பாடல் தென்றலின் குளுமையைத் தர, கதையின் நாயகன் கொடியவர்களை வேட்டையாடும் தருணத்தில் வருகிற ‘வெறிகொண்ட புலி ஒண்ணு’ பாடலிலும் அதற்கான காட்சியிலும் சூறாவளியின் சீற்றமிருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது. சண்டைப் பயிற்சி இடி மின்னல் இளங்கோ.
போதைப் பழக்கமும், அதிகார பலமும், பண பலமும் மனிதர்களை எந்தளவுக்கு மிருகமாக்குகிறது என்பதை எடுத்துச் சொல்வதை குறிக்கோளாக கொண்ட இயக்குநர் எஸ்.சசிகுமார் அதை சரியாகச் செய்திருப்பதற்காக பாராட்டலாம். படத்தை பார்ப்பதன் மூலம், காதல் வயப்பட்டிருக்கிற, காதல் வசப்படும் பருவத்திலிருக்கிற பெண்கள் விழிப்புணர்வு பெறலாம்.