யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் உள்ளிட்டோர் நடித்த ‘கஜானா’ திரைப்படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக கடந்த மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அன்றே பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் ”நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிமேஷன் காட்சிகள் நிறைந்த, சுவராஸ்யமான ஃபேண்டஸி படத்தை பார்த்தோம். நிச்சயம் இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்று பாராட்டினார்கள்.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் யுத்த மனநிலைக்கு மாறியுள்ளனர். இந்த போரின் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நம் அண்டை மாநிலங்களும், அம்மக்களும் பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்படும் செய்திகளால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், மக்களிடம் தற்போது திரைப்படம் பார்க்கும் மனநிலை இல்லை என்பதாலும், அனைவரும் போர் பதற்றம் குறித்த செய்திகளை அறியவே விருப்பம் காட்டுவதால், திரையரங்குகளுக்கு மக்களின் வருகை மிக மிக குறைவாகவே உள்ளது.
எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்ததோடு, பல வருடங்களாக உழைத்து மிகச்சிறந்த வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலம் உருவாக்கிய ‘கஜானா’ திரைப்படத்தை ஒரு சாதாரண வெளியீட்டாக அல்லாமல், பெரும்பாலான மக்கள் பார்த்து மகிழக்கூடிய மிகப்பெரிய வெற்றி படமாக்க வேண்டும், என்பதற்காக படக்குழு படத்தின் வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘கஜானா’ படத்தை இன்று மாலை காட்சியோடு நிறுத்த முடிவு செய்துள்ள படக்குழு, யுத்த பதற்றம் தணிந்த பிறகு வேறு ஒரு நல்ல தருணத்தில், படத்தைப் போலவே வெளியீட்டையும் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. மறுவெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.