‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் முதல் திரைப்படமாக வெளிவருகிறது ‘ஃபைட் கிளப்.’
‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா தயாரிப்பில், அப்பாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு டிசம்பர் 2; 2023 அன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘‘இந்தப் படம் மாநகரம் மாதிரி தான். எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உறியடி விஜய் குமார் என் நண்பன். அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017-லிலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார். எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன்.
படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள். விஜய் குமாரை தவிர இந்தப் படத்தில் பல புதுமுகங்கள். அவர்கள் இந்த படத்திற்குப் பிறகு பெரிதாகப் பேசப்படுவார்கள்.
நல்ல படங்களைத்தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
படத்தின் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத், ‘‘2020 ல் இப்படத்தை அறிவித்தோம் கொரோனா, ஷீட்டிங், லோகேஷன் என நிறையப் பிரச்சனை படம் 3 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய்குமார் சார் நினைத்திருந்தால் வேறு படம் இயக்கப் போயிருக்கலாம். ஆனால், எங்களுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் காத்திருந்து, இப்படத்தில் வேலை செய்த விஜய்குமார் சாருக்கு நன்றி. தான் மட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் லோகேஷ் சாருக்கு நன்றி. ஆதித்யா சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் ஆதித்யா, ‘‘விஜய் குமார் நடித்த உறியடி வந்ததிலிருந்து இன்று வரை அவரை வியந்து பார்க்கிறேன். அவர் நடிப்பில் படம் தயாரித்தது மகிழ்ச்சி. புதிய அனுபவத்தைத் தரும்படி இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரீல் குட் ஃபிலிம்ஸ் தொடர்ந்து நல்ல படங்களை வழங்கும்” என்றார்.
நிகழ்வில் நடிகை மோனிஷா மோகன், ‘‘திரைப்படம் தான் என் கனவு. உதவி இயக்குநராக இரண்டு படங்கள் மலையாளத்தில் வேலை பார்த்திருக்கிறேன். விஜய் குமாருக்குக் கேரளாவில் நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். இந்த படத்தில் நான் நடித்திருப்பதை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இயக்குநர் அப்பாஸ் படத்தை அட்டகாசமாக உருவாக்கியுள்ளார். உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.