‘ஆப்பு வைக்கும் ஆன்லைன் விளையாட்டு’ என்ற ஒன்லைனில் சமூகத்துக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்தியிருக்கும் ‘இ மெயில்.’
அபி, ஹெலன், நிஷா, ரியா, ஜெனி என ஐந்து இளம் பெண்கள் இணைந்து வசிக்கிறார்கள். ஜாலியாக நாட்களைக் கழிக்கிறார்கள். அவர்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வமாக இருக்கிற அபியின் பார்வைக்கு ஒரு விளையாட்டு வருகிறது. அது, அவள் தேர்ந்தெடுக்கும் நபர் இறந்தால் அவளுக்கு பணம் வரும் என்கிறது. நல்லது கெட்டது எதையும் யோசிக்காமல் அதில் ஈடுபடுகிறாள். எதிர்பார்த்தபடியே கட்டுக்கட்டாக கரண்சி குவிகிறது.
அப்படியே ஒரு இளைஞனைக் காதலிப்பது, அவனுடன் திருமணம் என அவளது நாட்கள் உற்சாகமாக கழிகிறது. ஒரு கட்டத்தில் அந்த உற்சாகத்துக்கு உலை வைக்கும் விதமாக ஆன்லைன் விளையாட்டு சார்ந்து ஒரு நபர் கொலையாக, அந்த பழி அபி மீது விழுகிறது. ஒரு தரப்பின் மிரட்டலுக்கும் ஆளாகிறாள்.
கொலைப் பழி, மிரட்டல் என சுற்றி வளைத்த சிக்கல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறாள்.
அவளுக்கு இதுவரை பணம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? கொலைப் பழியில் அவளை சிக்க வைத்தது யார்? இப்படியான பல கேள்விகளுக்கான பதில்களை அவளே கண்டுபிடிக்கிறாள். அத்தனையிலும் பரபரப்பும் விறுவிறுப்பும் தொற்றிக் கொள்ள, அவளால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ். இயக்கம் அறிமுக இயக்குநர் எஸ் ஆர் ராஜன்
கதையின் நாயகியாக ராகிணி திவேதி. ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது, பணம் வரும்போது சிநேகிதிகளுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்விப்பது, காதலனுடன் டூயட் என நீளும் காட்சிகளில் அதற்கேற்ற பொருத்தமான நடிப்பைத் தந்திருப்பவர்,
கொலைப்பழிக்கு ஆளானபின் தன்னைச் சுற்றி நடந்ததை, நடப்பதை கண்டறிவதிலும் எதிராளிகளை அடித்துத் துவைத்து துவம்சம் செய்வதிலும் அதிரடி அவதாரம் எடுத்து அசர வைக்கிறார். கவர்ச்சியிலும் கிறங்கடிக்கிறார்.
நாயகியின் மனதில் காதலனாக இடம்பிடிப்பதற்காக அக்கறை காட்டி, கணவனான பின் அவளை அன்பால் குளிப்பாட்டி, கிளைமாக்ஸில் வேறொரு முகம் காட்டியிருக்கிற அசோக்குமாரின் நடிப்பு பரவாயில்லை ரகம்.
ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிற மனோபாலாவின் அலட்டலும் அலப்பரையும் கொஞ்சமாய் சிரிப்பூட்டுகின்றன.
வில்லனாக பில்லி முரளி, வில்லியாக ஆர்த்திஸ்ரீ, நாயகிக்கு தோழிகளாக வருகிறவர்கள், ஹேக்கராக ஆதவ் பாலாஜி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கதைக்குத் தேவையானதை முடிந்தவரை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசையில் பாஸ் மார்க் போடும்படி திறமை காட்டியிருக்கிறார் ஜூபின்.
கவாஸ்கர் அவினாஸ் இசையில் பாடல்கள் மனதில் பதிய மறுத்தாலும் ஒருமுறை மட்டுமே ரசிக்கும் ரகமாக கடந்தோடுகின்றன.
திரைக்கதையில் சிலபல குறைகள் இருந்தாலும் ‘ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்’ என்பதை மிகச்சரியாக எடுத்துச் சொல்லிருப்பதற்காக இ மெயில் படக்குழுவை பாராட்டலாம்.