சின்னத்திரை சீரியல்கள் மூலம் நடிப்புப் பயணத்தை துவங்கியவர் திவ்ய பிரகாஷ். ‘சில்லுனு ஒரு காதல்’, ‘வானத்தைப் போல’, ‘பூவே பூச்சூடவா’, ‘இரட்டை ரோஜா’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர், பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அப்படியே ஆறு வருட கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் நகைச்சுவை நடிகர்
சாப்ளின் பாலு, கதையின் நாயகனாக நடித்த ‘தொட்டுப் பாரு இனி ஒரு பொண்ண’
என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.
தற்போது தென்னிந்திய சினிமா அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.ஏ.விஜயகுமார், ‘ஏ வி கே மூவிஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கும் ‘மைக்கேல் – முகமது – முருகன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க, பி.டி.ஜிஜு இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது.
திவ்ய பிரகாஷின் சொந்த ஊர் மதுராந்தகம். அப்பா சூரியபிரகாஷ், அம்மா தாட்சாயணி. எளிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல சிரமங்களைக் கடந்து இன்று நடிகை என்ற இடத்தை எட்டிப் பிடித்து, கதாநாயகி என்ற உயரத்தை தொட்டிருக்கிறார்.
அவரிடம் பேசியபோது, ”மக்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பேன்; நிச்சயம் சினிமாவில் நிலைத்து நிற்பேன்” என்றார் தன்னம்பிக்கையோடு.