‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ என்ற ஆங்கில மொழித் திரைப்படம் அமெரிக்க நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரூபஸ்பார்க்கர் (RufusParker), ”இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள், என்று பிரபல இயக்குனர்களும் சரி டாக்குமெண்ட்ரி எடுப்பவர்களும் சரி உலக நாடுகளுக்கு அதை தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
அதே சமயம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை பார்க்கும்போது ஏதோ சொர்க்க பூமி போல் காட்டி உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்ற இந்த படம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.
வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக அடக்கி வைத்து அவர்களை தையல் கூலிகளாக பயன்படுத்துகிறார்கள். பன்னிரண்டு மணி நேர வேலை, சவுக்கடி, பிரம்படி என்று பல்வேறு கொடுமைகள் நடத்தப்படுகிறது.
இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதுடன் அவர்களை வைத்து பாலியல் படங்கள் தயாரிப்பது உட்பட பல்வேறு சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதை இந்த படம் வெளிப்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் நிகழும் இந்த வன்கொடுமையை உலகிற்கு வெளிப்படுத்த பல்லாண்டு காலம் படத்தை எடுத்து வைத்து காத்திருந்தேன். பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த படம் அமெரிக்காவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகின் சொர்க்க பூமி என்று சொல்லப்படும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது என்பதை அறிந்து அங்குள்ள பிரபல ஹீரோக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த படம் தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் வெளியிடப்பட உள்ளது” என்றார்.