உங்கள் பேபிகளோடு போய் பார்க்கும்படியான படம்.
துபாயில் பணிபுரிகிற ஜெய், யோகிபாபு இருவரும் கொஞ்சநாள் முன் பிறந்த தங்கள் குழந்தைகளை பெற்றோரிடம் காண்பிப்பதற்காக சொந்த ஊருக்கு வரும்போது சிலரது குளறுபடியால் குழந்தைகள் மாறிவிடுகின்றன.
ஜெய்யின் அப்பா தன் மகனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்காக காத்திருக்க, ஜெய்யின் கையிலிருப்பது யோகிபாபுவின் ஆண் குழந்தை.
யோகிபாபுவின் அப்பா பெண் குழந்தைக்காக காத்திருக்க, யோகிபாபுவின் கையிலிருப்பது ஜெய்யின் ஆண் குழந்தை.
இப்படியான சூழலில் இருவரும் அவரவர் அப்பாவையும், குடும்பத்தினரையும் சமாளிப்பது காமெடி களேபரங்களாக கடந்தோட, ஜெய்யிடம் இருக்கும் குழந்தையை கடத்த இரு தரப்பினர் முயற்சி செய்ய கதை வேறொரு ரூட்டில் வேகமெடுக்கிறது.
குழந்தைகள் இடம்மாறியபின் தவித்துப் போவது, பெற்றோருக்கு விஷயம் தெரியாமல் சமாளிப்பது என நீளும் காட்சிகளில் கலகலப்பூட்டும்படியும், உணர்வுபூர்வமாகவும் நடித்திருக்கிறார்கள் ஜெய் _ பிரக்யா நாக்ரா, யோகிபாபு _ சாய் தன்யா ஜோடிகள்.
பேரனை எதிர்பார்க்கிற சத்யராஜ், பேத்தியை எதிர்பார்க்கிற இளவரசு இருவரும் மகன்களால் ஏமாற்றப்படுவது ரகளையாக இருக்க,
குழந்தையை கடத்த நினைக்கும் ஸ்ரீமன், குழந்தையைக் கடத்துவதற்காக களமிறங்குகிற மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி என அனைவரும் அவரவர் பங்குக்கு சிரிப்பூட்ட,
ஆனந்த்ராஜ் மாமாவின் சொத்துக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க நடப்பதெல்லாம் ஏடாகூடமாக அமைகிற காட்சிகளில் அவர் பாணியில் மனதுக்கு ரிலாக்ஸ் தருகிறார்.
இமான் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்; கதையின் பெரும்பகுதி கலர்ஃபுல்லான காட்சிகளாய் பின்னிப் பிணைந்திருக்க சாரதியின் ஒளிப்பதிவு அந்த காட்சிகளை தரம் உயர்த்தியிருக்கிறது.
பழக்கப்பட்ட கதையில் பிரபலமான நடிகர்கள், கமர்ஷியல் சினிமாவுக்கான மசாலாக்கள் என எல்லாவற்றையும் அப்லோடு செய்த இயக்குநர் பிரதாப், அவற்றை இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி அப்கிரேட் செய்திருந்தால் ரசிகர்களின் லைக் குவிந்திருக்கும்.