ஒரு பெண்ணை, மூன்று இளைஞர்கள் சுற்றி வளைத்துக் காதலிக்க, ஒட்டுமொத்த ஆண்களையும் வெறுக்கும் அவள் அந்த மூன்று பேரையுமே காதலிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால் அவள் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்வாள்? என்ன மாதிரியான கஷ்ட நஷ்டங்களைச் சந்திப்பாள்? -இப்படி சற்றே வித்தியாசமாக சிந்தித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜடையனூர் ஜானகிராமன் இயக்கியிருக்கும் படம்.
அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படும் நெருக்கடியான சூழ்நிலையில், தன்னை ஒரு தலையாக காதலிக்கிற மூவரையும் காதலிப்பதாக சொல்வது, அதன் மூலம் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு லட்சம் பணம் பெறுவது, காதலர்களுக்கு விவரம் தெரிந்தபின் விபரீத முடிவுக்காக முயற்சிப்பது, காதலனுடன் டூயட் பாடலில் வேண்டா வெறுப்பாய் நடனமாடுவது என நீளும் காட்சிகளில் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார் கதையின் நாயகியான கெனி.
கதைநாயகியை காதலிக்கும் மூன்று பேரில், நாயகியோடு ‘டூயட்’டில் ஆட்டம்போடும் வாய்ப்பு ராஜ்நிதனுக்கு. அந்த ஆட்டத்தில் ஹீரோயினை ஆசையாக கட்டிப் பிடிப்பவர் நடிப்பில் பாஸ் மார்க்கை எட்டிப் பிடிக்கிறார்.
கதைநாயகியின் அம்மாவாக ஆண்களின் சுயநலத்தால், காமவெறியால் பாதிக்கப்படும் பெண்ணாக வருகிற கும்கி ஆனந்தியின், கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிப் பிரதிபலித்திருக்கும் நடிப்புக்கு ஸ்பெஷல் பாராட்டு!
தங்கள் தகுதிக்கு ஒத்து வராதவனை மகள் காதலிக்கும்போது சராசரி அப்பாக்கள் எதை செய்வார்களோ அதை அப்படியே தன் நடிப்பில் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார் வாசு விக்ரம்.
ஹீரோயினை காதலிக்கிற மற்ற இரு இளைஞர்கள், வில்லன்கள் என படத்தில் மிகச்சிலர் மட்டுமே நடித்திருக்க, அவர்களின் நடிப்பில் குறையில்லை.
தன் பெண்ணுக்கு தகுதியான மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க, கதாநாயகியின் அம்மா கையாளும் தந்திரத்தை எளிதில் யூகிக்க முடிகிறது.
பிரித்வியின் பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்லும் விதத்தில் காட்சிகளை ஆக்கிரமித்திருக்க, ‘கிறுகிறுன்னு கிறங்குறேண்டி’ பாடலில் அதிரடி அட்டாகாசம் செய்திருக்கிறார் ஆரோன்.
கொஞ்சம் வித்தியாசமாக கதையை யோசித்த இயக்குநர், திரைக்கதையில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் தியேட்டரில் நின்று பார்க்கிற அளவுக்கு கூட்டத்தைக் கூட்டியிருக்கலாம்.
6 கண்களும் ஒரே பார்வை – மேக்கிங்கில் குறைகள் தென்பட்டாலும் கதையில் வெளிச்சம் அதிகம்!
Rating 3/5