அந்த ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்குச் சேரும் இளைஞன் சஞ்சய், அங்கு நடந்துகொண்டிருக்கும் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு, ஹோட்டல் மேனேஜரைக் கொன்று விட்டு தப்பிக்கிறான். ஹோட்டலின் உரிமையாளர் சஞ்சயை தேடிக் கண்டுபிடித்து அவன் வசமுள்ள ஆதாரங்களைக் கைப்பற்றவும், சஞ்சயை கொன்று தீர்க்கவும் திட்டமிட்டு களமிறங்குகிறார்.
இன்னொரு பக்கம், சிறார் கூர்நோக்கு மையம் ஒன்றின் பாதுகாவலர் காணாமல் போன விவகாரத்தில் சஞ்சயை போலீஸ் தேடுகிறது.
இப்படி கதை சூடுபிடிக்க, சஞ்சய் யார்? அவன் திரட்டிய ஆதாரங்கள் எப்படிப்பட்டவை? சஞ்சயை போலீஸ் தேடுவதற்கான காரணம் என்ன? கொலை செய்து தப்பித்த சஞ்சய் எங்கே போனான்?
இப்படி பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகள் பதில் தந்து நகர்கின்றன…
சஞ்சயாக நிகில். வாலிபப் பருவத்தின் தொடக்கத்திலிருக்கும் அவர் நடிப்புக்கு புதியவர். காதல், ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட் என பலவற்றில் புகுந்து விளையாடியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் பெட்டரா நடிச்சிருக்கலாம் என்று சொல்லும்படி இருக்கிறதே தவிர, குறை சொல்லும்படி இல்லை.
நாயகி ஹர்ஷாவுக்கு ஒன்றிரண்டு காட்சிகளில் காதல் உணர்வை வெளிப்படுத்தவும், ஒரு பாடலில் ஆடவும் வாய்ப்பு. போதுமான அளவில் நடித்து கடந்து போகிறார்.
ஹோட்டல்களில் நடப்பதாக பல படங்களில் பார்த்துப் பழகிய குற்றச் செயல்களை நகலெடுத்துச் செய்யும் கடமையை மிரட்டலாக செய்திருக்கிறார் வில்லனாக வருகிற அருண் ராஜா.
இமான் அண்ணாச்சி, காத்து கருப்பு கலை இருவரும் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலில் கவர்ச்சி காட்டியிருக்க பிர்லா போஸ், இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, பிரபாகர் என மற்றவர்கள் முக்கிய கேரக்டர்களில் சரியான விகிதத்தில் நடித்திருக்கிறார்கள்.
வேலன் சகாதேவனின் இசை காட்சிகளின் பரபரப்புக்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களையும் கவனம் பெறும் அளவில் இருக்கின்றன. நேர்த்தியான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் சி பாரதிராஜன்.
வழக்கமான பழி வாங்கல் கதைதான் என்றாலும் இயக்குநர் ஜெகன் ராயன் திரைக்கதையில் சில அதிரடியான திருப்பங்களை கலந்துகட்டியிருப்பதால் ஓரளவு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவம் கிடைக்கிறது!
Rating 3 / 5

