எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும் பருவத்தில் நிறைவேறுகிறது. கொரியாவுக்கு போன செண்பகம், அங்கு உடல்நிலை சரியில்லாத பாட்டி ஒருவரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார்.
நாட்கள் போகப்போக பாட்டியுடன் நெருக்கம் அதிகமாகி, அந்த நெருக்கம் பாசப்பிணைப்பாகிறது. அதனால் ஒரு சிக்கல் உருவாக, கொரியா செண்பகத்துக்கு இன்னும் சில அனுபவங்களையும் கொடுக்கிறது. அதையெல்லாம் அழகான திரைமொழியில் தொகுத்திருக்கிறார் ‘நித்தம் ஒரு வானம்’ ரா கார்த்திக்.
கொரியாவுக்கு போகும் ஆசையை வெளிப்படுத்தும்போது குழந்தைத்தனம், காதலன் துரோகம் செய்த நிலையில் மன உளைச்சல், கொரிய பாட்டி மீதான பாசம், பாட்டியின் உணவகம் துவங்கும் ஆசையை நிறைவேற்றி மனநிறைவு பெறுதல், திருட்டுப் பழிக்கு ஆளாகி பதறுதல் என காட்சிக்கு காட்சி இயல்புத் தன்மை மீறாத, கவனத்தை தன் பக்கம் இழுக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார் செண்பகாவாக வருகிற பிரியங்கா மோகன்.
நல்லவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் துரோகியாகிறான். அப்படியொரு கேரக்டரில் ரிஷிகாந்த். பிரியங்காவின் காதலனாக மிகச்சில காட்சிகளில் வந்து எளிமையாக நடித்திருக்கிறார்.
கொரிய பாட்டி ஏக்கம், பாசம், அக்கறை, கோபம், உற்சாகம் என எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்; எதார்த்தமான நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார். முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிற மற்ற கொரிய முகங்களும் குறையின்றி நடித்திருக்க, அழகான கொரியா பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது.
பாடல்களை மென்மையான இசையில் வழங்கி, காட்சிகள் கடத்துகிற உணர்வுகளுக்கேற்ப பின்னணி இசையமைத்திருக்கிறார் ஹேஸாம் அப்துல் வஹாப்.
வன்முறை வெறியாட்டங்களில்லாத, ஆபாசமில்லாத, ஹீரோயிஸமில்லாத, மனதுக்கு இதம் தரும் விதமான படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் மேட் இன் கொரியா உங்களுக்குப் பிடிக்க வாய்ப்புண்டு. படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
Rating 3 / 5 

