தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரமாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘கேப்டன் மில்லர்.’ தனுஷும் பிரியங்கா மோகனும் முதன்மை பாத்திரங்களில் நடிக்க சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன் வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ரசிகர்களின் முன்னிலையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் தனுஷ், ‘‘வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம் இது. உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப்படத்தின் டெவில். அவரும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான் வருகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார்.
கேப்டன் மில்லர் லுக்கை உருவாக்கிய திவ்யாவுக்கு நன்றி. கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?எதற்குச் சுதந்திரம் இருக்கிறது? எது சொன்னாலும், எது செய்தாலும், இங்கு குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ‘‘முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், அந்தக் கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன், முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார், ஆனால் நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார்.
பிரியங்காவிற்கு முதல் நாள் ஷூட்டிங்கிலேயே, துப்பாக்கி தந்துவிட்டோம், பயந்து விட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார், அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப் படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” என்றார்.
நிகழ்வில் படத்தின் நாயகி பிரியங்கா மோகன், படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ், நடிகர்கள் சந்தீப் கிஷன், சிவராஜ்குமார், இளங்கோ குமரவேல், வினோத், ஜெயப்பிரகாஷ், சதீஷ், காளி வெங்கட், ராம்குமார், எட்வர்ட், நடிகை நிவேதிதா, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன், காஸ்ட்யூம் டிசைனர் காவ்யா, கலை இயக்குநர் ராமலிங்கம், எடிட்டர் நாகூரான், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் உமாதேவி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோரும் பேசினார்கள்.